சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சி, தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. அதில், அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.26,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று கட்சி வலியுறுத்தியுள்ளது. அனைத்து துறைகளிலும் 8 மணி நேர வேலை கட்டாயமாக்கப்படும் என்றும், மிகை நேரத்திற்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத் தொழிலாளர்களுக்கு நாள் கூலி ரூ.700 ஆக நிர்ணயிக்கப்படும் என்றும், 200 நாள் வேலை உறுதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செலவில் 50 சதவீதம் லாபம் சேர்த்து ஆதார விலை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக கட்சி தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு அரசு சார்பில் தனி காப்பீட்டு நிறுவனம் தொடங்கப்படும் என்றும், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இலவச மருத்துவம் உறுதி செய்யும் Right to Health Act சட்டம் இயற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில மொத்த உற்பத்தியில் 8 சதவீதம் சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழ்நாட்டில் அமல்படுத்த மறுப்பதாகவும், மருத்துவம், பொறியியல் உள்பட உயர்கல்வி வரை தாய்மொழியில் கற்பிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது
சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு விரைந்து அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வன்கொடுமை வழக்குகளை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க அனைத்து மாவட்டங்களிலும் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், நலிந்த பிரிவு பெண்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் புதிய ஆட்டோ மானியம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.6,000 ஆக உயர்வு ஆகியவை முக்கிய அறிவிப்புகளாக உள்ளன. பாஜ – ஆர்எஸ்எஸ் வகுப்புவாத அரசியலை எதிர்த்தும், மாநில உரிமைகளை காக்கவும், மதச்சார்பற்ற ஆட்சியை நிலைநாட்டவும் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு தமிழக மக்களை கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
