சொன்னாரு: ஆரோக்கியமான குழந்தைகளே நாட்டின் வளமான எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022ம் ஆண்டு சட்டப்பேரவையில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது என்று அறிவித்தார்.
செஞ்சாரு: தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழித்து, ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் நோக்கில் 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் தொடக்கி வைத்த இந்தத் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் முதன்மை இலக்கு 6 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளிடையே கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாட்டை (Severe Acute Malnutrition – SAM மற்றும் Moderate Acute Malnutrition – MAM) கண்டறிந்து, அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதாகும். மாநிலம் முழுவதும் அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம், தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து ஆலோசனை வழங்கி, குடும்ப அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
முதல் கட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 37.79 லட்சம் குழந்தைகளின் வளர்ச்சி நிலை கண்காணிக்கப்பட்டது. இதில் 9.30 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய ‘தனிப் பெட்டகம்’ வழங்கப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் இதில் இடம் பெற்றுள்ளன. சிறப்பு மருத்துவ முகாம்கள், எடை கண்காணிப்பு, ரத்த சோகை சோதனை போன்றவை தொடர்ந்து நடத்தப்படுகின்றன. மூன்று ஆண்டுகளில் (2022 முதல் 2025 வரை) கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்த 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்துள்ளது.
2024 நவம்பரில் அரியலூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தார். ரூ.22 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்கட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தொடர் கண்காணிப்பு, சிறப்பு உணவு வழங்கல், தாய்மார்களின் பங்கேற்பு அதிகரிக்கப்படும். அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து செயல்படுகின்றனர். குழந்தைகளின் உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதன் மூலம் எதிர்கால தமிழகத்தை வலுப்படுத்தும். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் வளர்ச்சி குன்றல், எடை குறைவு, ரத்த சோகைபோன்ற பிரச்சினைகளை தீர்க்க இது முக்கிய பங்கு வகிக்கிறது.
