1. அண்ணாநகர் கார்த்தி என அழைக்கப்பட்ட நீங்கள், வில்லிவாக்கத்தில் போட்டியிடுவது ஏன்? இனி வில்லிவாக்கம் கார்த்தியாகவே அடையாளப்படுத்தப்படுவீர்களா?
எனது தந்தை 10 ஆண்டுகள் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நான் திமுக தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். வில்லிவாக்கம் தொகுதிக்கு நான் புதியவன் அல்ல. 1998ல் எனது முதல் ஓட்டைப் பதிவு செய்தது முதல் இன்று வரை நான் வில்லிவாக்கம் வாக்காளராகவே இருந்து வருகிறேன். என் வீடு இருப்பதும் வில்லிவாக்கத்தில்தான். இந்த முறை இந்தத் தொகுதியில் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை உள்ளது.
2. வில்லிவாக்கம் தொகுதி வளர்ச்சிக்கு நீங்கள் முன்வைக்கும் முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன?
கடந்த சில நாட்களாகத் தொகுதியில் மேற்கொண்ட பரப்புரையின் மூலம் மக்களின் தேவைகளை அறிந்துள்ளேன். முக்கியமாக மூன்று விஷயங்களை பொதுமக்கள் முன்வைத்தனர். மழைநீர் வடிகால் திட்டம் ஏற்கனவே 80% பணிகள் முடிந்துவிட்டன. எஞ்சியுள்ள சிறு குறைகளையும் நீக்கி, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்க வேண்டும். விளையாட்டு மைதானம் என்பது வில்லிவாக்கம் தொகுதி இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. எனவே, மழைநீர் வடிக்கால் திட்டம், நவீன விளையாட்டு மைதானம் மற்றும் தரமான கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும். அதேபோல் பொதுமக்களின் சுகாதாரத் தேவைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதன்படி தரமான கல்வி மற்றும் மருத்துவ வசதிகளையும் வழங்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளேன்.
3. வில்லிவாக்கம் தொகுதியில் பிரதான போட்டி யார் யாருக்கு இடையே? தவெக தலைவர் விஜய் சொல்லியது போல, ‘திமுக-தவெக இடையேதான் போட்டி’ என்பது கிடையாதா?
இந்தத் தேர்தல் ‘டெல்லி vs தமிழ்நாடு’ இடையிலான போட்டி என்பது தான் உண்மை. இது தமிழக மக்களின் உரிமை, உணர்வுகளைப் பாதுகாக்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமையும். கண்டிப்பாக தமிழக மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.
4. வில்லிவாக்கம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் ஆதவ்அர்ஜூனா உங்களுக்கும் முதல்வரின் மருமகன் சபரீசனுக்கும் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் என்பதால், அவருடைய பிளஸ்-மைனஸ் தெரிந்து, அவரை உங்களுக்கு எதிர்கொள்வது சுலபம் என சொல்லப்படுகிறதே?
நான் இன்னொருவரின் பிளஸ் மற்றும் மைனஸ் பார்த்து இந்தத் தேர்தலில் களம் இறங்கவில்லை. எங்கள் கட்சியின் பலம் மற்றும் தேர்தல் அறிக்கை ஆகியவை தான் எங்கள் பலம். இதனை மக்கள் அனைவரும் வரவேற்கின்றனர். வில்லிவாக்கம் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு பிரதிநிதியாக, அமோக வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதேபோல சபரீசன் எனக்கு 30 வருடங்களாக நண்பர். நான் அரசியல் களத்தில் புதிய முன்னெடுப்பை தொடங்கி முதல்முறையாகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளதால், ஒரு நண்பராக எனக்கு ஆதரவு அளிக்க வந்தார். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை.
