×

மக்கள்கிட்டையும் கொள்ளையடிக்குறாங்க… கடவுள்கிட்டையும் கொள்ளையடிக்குறாங்க… புதுச்சேரியில் உயிரை பறிக்கும் ஊழல் நடக்கிறது

* பாஜ, என்.ஆர்.காங். ஆட்சி தொடர்ந்தால் எல்லாத்தையும் அதானிக்கு வித்துருவாங்க…
* ராகுல் கடும் தாக்கு

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் லாஸ்பேட்டை நவீன மீன் மார்க்கெட் அருகில் உள்ள மைதானத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி வரவேற்றார். இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்பி கலந்து கொண்டு காங்கிரஸ், திமுக, விசிக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது: புதுச்சேரியை ஆட்சி செய்பவர்கள், இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல. எங்கேயோ இருக்கும் சிலர் இந்த மக்கள் மீது திணிக்கின்ற கருத்துகளின் அடிப்படையில் நடத்துகின்ற அரசாக இது இருக்கிறது. பாஜவின் கொள்கைகள், சித்தாந்தத்தை இந்த மண்ணில் புகுத்த நினைக்கிறார்கள். புதுச்சேரி மக்களின் எண்ணத்தை உள்வாங்கி, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுகின்ற ஆட்சியாக இந்த ஆட்சி நடக்கவில்லை.

இந்த மாநிலத்தை துணைநிலை ஆளுநரை வைத்து கொண்டு பாஜ ஆட்டி படைக்கிறது. இந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ, மக்களுடைய விருப்பமோ நிறைவேற்றப்படுவதில்ைல. இங்கு பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இங்கு உயிரோட்டமாக இருந்த தொழில்துறை கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து இறந்து கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.
காரைக்கால் துறைமுகம் ஏற்கனவே விலை பேசி அதானிக்கு தாரைவார்க்கப்பட்டு உள்ளது. பாஜ அரசு தொடர்ந்தால் மின்சாரம் முதற்கொண்டு அரசின் இயற்கை வளங்கள் அதானி குழுமத்திற்கு விற்கப்பட்டுவிடும் என்று எச்சரிக்கிறேன்.

போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருவதால், அது ஊழல் மட்டுமல்ல நிறைய பேரை கொலை செய்யும் அளவுக்கு கலப்பட தொழிலாக உருவெடுத்து இருக்கிறது. புதுவை அரசில் கொடுக்கப்படும் ஒவ்வொரு ஒப்பந்தத்துக்கும் 30 சதவீதம் கமிஷன் வாங்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். எதை தொட்டாலும் கமிஷன். குடிநீர், வடிகால், பள்ளி கட்டிடம், அரசின் எந்த திட்டங்களிலும் கமிஷன் வாங்குவது மட்டும் அரசு செய்யும் வேலையாக உள்ளது. இங்குள்ள வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடம் அருகே மதுபான கடைகள் திறக்கப்படுகிறது. இதனால் சமூக அமைதிக்கு பங்கம் வரும் சூழல் உருவாகி வருகிறது.

மக்களிடம் இருந்து மட்டும் கொள்ளை அடிக்கவில்லை. கடவுளிடம் இருந்தும் கொள்ளை அடிக்கிறார்கள். கோயில் நிலங்களை கொள்ளை அடித்து விற்பனை செய்துள்ளார்கள். இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதனால் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். அரசு மற்றும் தனியாரில் புதிதாக 30 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம். அரசு வேலைவாய்ப்புக்கான வயது வரம்பு 40 ஆக உயர்த்தப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும். எந்த நோய் வந்தாலும், சிகிச்சை பெற்றுக் கொள்ள ரூ.20 லட்சத்தை அரசு வழங்கும். எல்லாவற்றுக்கும் மேலாக வரக்கூடிய அரசு புதுச்சேரி மக்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும், ஆசைகளையும் பிரதிபலிக்கும் அரசாக இருக்கும். துணைநிலை ஆளுநர் ஆள்வதை நாங்கள் ஏற்கவில்லை.

புதுச்சேரியை மண்ணின் மைந்தர்கள் ஆள வேண்டும் என்பதே எங்களது நிலைபாடு. எனவே தான், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்கிறோம். காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். எனவே, நீங்கள் காங்கிரஸ் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளரையும் ஆதரித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரசாரத்தின்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையையும் ராகுல்காந்தி வெளியிட்டார்.

* நாராயணசாமி ஆட்சியில்தான் ஊழல் உச்சம்: அமித்ஷா பதிலடி
புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருக்கனூர் கடை வீதியில் நேற்று மாலை நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்றார். ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து பேசியதாவது: நீங்கள் 2வது முறையாக பிரதமர் மோடியின் ஆட்சியை மீண்டும் புதுவையில் அமைக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் தேஜ கூட்டணி அரசை மிகப்பெரிய பெரும்பான்மையோடு வெற்றி பெற செய்யுங்கள். நம் புதுச்சேரியை உயர்ந்த உன்னதமான இடத்திற்கு எடுத்து செல்வோம் என்ற உறுதியை நான் கொடுக்கிறேன்.

புதுச்சேரியில் இதற்கு முன்பு ஆட்சியில இருந்து காங்கிரசின் நாராயணசாமி அரசு புதுச்சேரியை மிகவும் பின்தங்கிய மாநிலமாகவும், பிற்போக்குள்ள இடமாகவும் அமைத்திருந்தது. இதையெல்லாம் சரி செய்யவே 5 ஆண்டுகள் நம்முடைய ஆட்சிக்கு சரியாக இருந்தது. இப்போது நாம் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்றால், நீங்கள் தேஜ கூட்டணிக்கு மீண்டும் பெரும்பான்மையான வெற்றியை பெற செய்ய வேண்டும். நாராயணசாமி ஆட்சி காலத்தில் ஊழல்தான் உச்சத்தில் இருந்தது. மருத்துவ கல்லூரியில் இடஒதுக்கீட்டில் கொடுக்க வேண்டிய சீட்டை கூட கூவி கூவி விலைக்கு விற்றார்கள். பட்டியலின மக்களுக்கு கிடைக்க வேண்டிய சீட் கூட லஞ்சத்துக்காக விற்கப்பட்டது. நம்முடைய அறிக்கைபடி ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு காங்கிரஸ் அரசு சென்டாக் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

சிஐஜி அறிக்கையில் சொன்ன ரூ.15 ஆயிரம் கோடி இருந்தால் மூன்று ஆண்டு காலம் புதுச்சேரி வளர்ச்சிக்கான பட்ஜெட்டை போட்டு இருக்கலாம். காங்., ஆட்சி காலத்தில் வேலை இல்லாத திண்டாட்டம் 47 சதவீதம் உயர்ந்திருந்தது. நம்முடைய ஆட்சி காலத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எடுத்த தொடர் முயற்சியால் 47 சதவீதமானது, 4.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு ராகுல்காந்தி கேரளாவுக்கு சென்றார். அங்கு அவர் சொன்னார், வளைகுடா நாட்டில் நடக்கும் போரின் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. அவை கிடைக்காமல் போகிறது என்று கூறியுள்ளார்.

ராகுல்காந்தி எப்போதும் கனவு உலகத்தில் மிதக்கிறார். அவர் சொன்னது உண்மைதான். பெட்ரோல் விலை ரூ.458 ஆகவும், டீசல் விலை ரூ.520 ஆகவும் உயர்துள்ளது. அது இந்தியாவில் இல்லை. நீங்கள் (ராகுல் காந்தி) எப்போதும் நேசிக்கும் பாகிஸ்தானில்தான் அந்த விலையில் விற்கப்படுகிறது. ராகுல்காந்தி பாகிஸ்தானை பார்த்து இங்கு தேவையில்லாமல் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். புதுச்சேரியின் வளர்ச்சி மிகப்பெரிய வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என்றால், அமைச்சர் நமச்சிவாயத்தை மீண்டும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்ய வேண்டும். தேஜ கூட்டணிக்கு பெரிய வெற்றியை தந்து மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : God… ,Puducherry ,BJP ,NRCongress ,Adani… ,Rahul ,Puducherry Congress Party ,Lospet ,
× RELATED மேற்குவங்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை...