சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு நாளன்று அச்சு ஊடக விளம்பரம் செய்ய முன்-சான்றளிப்பு பெற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று அச்சு ஊடக விளம்பரங்களுக்கு, ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவின் முன்-சான்றளிப்பு அளிப்பது தொடர்பாக;
1. அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15ம் தேதி அறிவித்தது.
2. நியாயமான தேர்தல் பிரசார சூழலை உறுதி செய்வதற்காக, மாநில/மாவட்ட அளவிலான ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன்-சான்றளிப்பு பெறாமல், எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ, அமைப்போ அல்லது நபரோ வாக்குப்பதிவு நாளன்றும் மற்றும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளன்றும் அச்சு ஊடகங்களில் எந்த விளம்பரத்தையும் வெளியிடக்கூடாது.
3. தனிநபர்கள் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் விளம்பரங்களுக்கான சான்றளிப்பிற்கு மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் விண்ணப்பிக்கலாம். ஒரு மாநிலம்/யூனியன் பிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட அனைத்து பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் அத்தகைய விளம்பரங்களுக்கான சான்றளிப்பிற்கு மாநில அளவிலான ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் விண்ணப்பிக்கலாம்.
4. அதன்படி, தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி அச்சு விளம்பரங்களுக்கு முன்-சான்றளிப்பு அவசியம்:
அதன்படி, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வாக்குப்பதிவு நாளான 9ம் தேதி விளம்பரம் செய்ய 8 மற்றும் 9ம் தேதிக்குள் முன் சான்றிதழ் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் 23ம் தேதி விளம்பரம் செய்ய 22.4.2026 மற்றும் 23.4.2026, மேற்குவங்கம் 23ம் தேதி (கட்டம்-I) 29.4.2026 (கட்டம்-II) விளம்பரம் செய்ய 22.4.2026 மற்றும் 23.4.2026 மற்றும் 28.4.2026 மற்றும் 29.4.2026க்கு முன் அனுமதி பெற வேண்டும்.
5. அச்சு ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு முன்-சான்றளிப்பு கோரும் விண்ணப்பதாரர்கள், விளம்பரம் வெளியிட திட்டமிடப்பட்ட தேதிக்கு குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
6. சரியான நேரத்தில் முன்-சான்றளிப்பு வழங்குவதை எளிதாக்க, மாநில/மாவட்ட அளவிலான ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிக்கள் இத்தகைய விளம்பரங்களை ஆய்வு செய்து முன்-சான்றளிக்க தயார் நிலையில் உள்ளன, மேலும் முடிவுகள் விரைவாக எடுக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
7. ஊடகங்களில் சந்தேகிக்கப்படும் கட்டணச் செய்திகள் குறித்து ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதோடு, தகுந்த நடவடிக்கையும் எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
