×

விஜய் அறிவித்த வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யவில்லை: கடைசி நேரத்தில் ‘டிவிஸ்ட்’

 

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, ஓசூர் தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விஜய் அறிவித்த வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யவில்லை. கடைசி ேநரத்தில் அவர்களுக்கு பதில் வேறு வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை கடந்த மாதம் 29ம்தேதி, சென்னையில் அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி வேட்பாளராக குமரவேல், ஓசூர் தொகுதி வேட்பாளராக அம்ரிஷ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவித்தார். இதையடுத்து ஊருக்கு திரும்பிய இருவரும் தங்களது தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான பணிகளிலும் ஆயத்தம் காட்டி வந்தனர். இந்தநிலையில் ஊத்தங்கரை தொகுதி தவெக வேட்பாளராக டாக்டர் இளையராஜாவும், ஓசூர் தொகுதி வேட்பாளராக வேந்தர்கரசனும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். விஜய் மேடையில் பெயரை அறிவித்து, மகிழ்ச்சியுடன் தம்ஸ்அப் காட்டிய 2 வேட்பாளர்கள், கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: ஊத்தங்கரை தொகுதி தவெக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ள டாக்டர் இளையராஜா, அதிமுக துணைப்பொதுச்ெசயலாளர் கே.பி.முனுசாமியின் தீவிர ஆதரவாளர். அதிமுக மாவட்ட மருத்துவரணி செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். கே.பி.முனுசாமியிடம் அதிமுக சார்பில் ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து காய்நகர்த்தி வந்தார். ஆனால் கே.பி.முனுசாமி, தனது மற்றொரு தீவிர ஆதரவாளரான சிட்டிங் எம்எல்ஏ தமிழ்செல்வத்திற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால் அதிருப்தியில் உறைந்த டாக்டர் இளையராஜா, எப்படியாவது தேர்தலில் போட்டியிட்டு முனுசாமிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். சுயேச்சையாக போட்டியிடவும் முடிவு செய்துள்ளார்.

அதேநேரத்தில் தவெகவில் இளைஞரணி பொறுப்பு வகித்து ஊத்தங்கரை ெதாகுதிக்கு சீட் வாங்கிய குமரவேல், தேர்தல் செலவுக்கு பணமின்றி தவித்து வந்தார். பிரசாரமும் மந்தமாகவே சென்றது. இதற்கிடையில் சுயேச்சையாக போட்டியிடும் முடிவில் இருந்த இளையராஜாவை உள்ளூர் தவெக முக்கிய நிர்வாகிகள் தொடர்பு கொண்டுள்ளனர். சுயேச்சையாக போட்டியிடுவதற்கு பதில், எங்கள் கட்சி வேட்பாளராக போட்டியிடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தனர். இதையேற்று ஒரு வாரத்திற்கு முன்பு, தவெகவில் இணைந்தார் இளையராஜா. அவரை ஓவர் நைட்டில் வேட்பாளராக அறிவித்துள்ளது தவெக தலைமை. இதேரீதியில் தான், ஓசூர் ெதாகுதி தவெக வேட்பாளர் அம்ரிசும் மாற்றப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவித்த நிலையில் அவரது பணிகள் திருப்தி அளிக்கவில்ைல. இதனால் அவருக்கு பதில் வேந்தர்கரசன், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இப்போது விஜய் ஊத்தங்கரைக்கு ஏற்கனவே அறிவித்த வேட்பாளர் குமரவேல், கடும் அதிர்ச்சியில் உறைந்து சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

 

Tags : Vijay ,Uthankarai ,Tamil Nadu Vetrikalagam ,Hosur ,Krishnagiri ,Legislative Assembly ,T.V.E. ,
× RELATED கோடைக்காலம் தொடங்கி உள்ளதால்...