சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இறுதி நாளான நேற்று திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒரே நேரத்தில் மனுதாக்கல் செய்ய குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக 7,150 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 9ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை கடந்த மார்ச் 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் கடந்த மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி (நேற்று) வரை தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக, நாதக கட்சிகள் என நான்குமுனை போட்டி நிலவி உள்ளது. திமுக 23 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அன்புமணி தரப்பு பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. வழக்கம் போல் சீமான் தனித்து களம் காண்கிறார். மேலும், தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு வரும்படி பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தும் எந்த கட்சிகளும் விஜய்யுடன் இணையாததால் தனித்து போட்டியிடுகிறது.
அந்த வகையில் கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து நான்கு நாட்கள் நடைபெற்ற மனுதாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. முதல் 3 நாட்களில் 3,430 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இறுதி நாளான நேற்று எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேனி மாவட்டம் போடி தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவினாசி தொகுதியில் பாஜ ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சாத்தூர் தொகுதியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திருவண்ணாமலை தொகுதியில் அமைச்சர் எ.வ.வேலு, காட்பாடியில் துரைமுருகன், தூத்துக்குடியில் கீதாஜீவன், ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர்.காந்தி என திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, பாமக, தவெக மற்றும் சுயேச்சைகள் என 3700க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
மொத்தம் 234 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக கடந்த 4 நாட்களில் மட்டும் 7,150 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வில்லிவாக்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒரு திருநங்கை வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனு தாக்கல் செய்து உள்ளனர். இதில் மாற்று வேட்பாளராக தங்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினரை மனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் மட்டும் 105 வேட்பு மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மானாமதுரை (தனி) தொகுதியில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் நேற்று மாலை 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக, தேர்தல் அலுவலகங்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, தவெக மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஒரே நேரத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 3 மணிக்குள் தேர்தல் அலுவலகம் வந்த வேட்பாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் போலீசாரும் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லாமல் அமைதியான முறையில் மனு தாக்கல் நிறைவடைந்தது.
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்ததையொட்டி, இன்று (7ம் தேதி) தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்பு வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். தகுதியான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 9ம் தேதி மாலை 3 மணியுடன் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் வாங்கலாம். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதுடன், சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கப்படும். 10ம் தேதி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், புகைப்படம், சின்னம் ஒட்டும் பணி நடைபெறும். இதையடுத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று 10ம் தேதி முதல் பூத்சி லிப் வழங்க உள்ளனர். இதை தொடர்ந்து, வருகிற 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
