×

கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் குழந்தைகளுக்கு சின்னம்மை நோய் தடுப்பூசி போட வேண்டும்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

வேலூர்: கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு சின்னம்மை நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் இருந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாகி விட்டது. இதனால், வெயில் காலத்தில் மக்களுக்கு வரக்கூடிய தட்டம்மை, சின்னம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கி போன்ற நோய்களின் தாக்கம் தமிழ்நாடு முழுவதும் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் தவிர, ஆங்காங்கே தனியார் மருத்துவமனைகளிலும் இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே குழந்தைகளுக்கு சின்னம்மை நோய் வராமல் தடுக்க தனியார் மருத்துவமனைகளில் சின்னம்மை தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சின்னம்மை நோய், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. பாதிக்கப்பட்டவர் இருமும்போது தும்மும்போது வெளிவரும் காற்று துளிகள் வாயிலாகவும், கொப்பளங்களில் இருந்து வரும் திரவத்தை தொடுவதாலும், அவர்கள் பயன்படுத்திய உடைகள், பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதாலும் சின்னம்மை பரவுகிறது. இந்த நோய் பொதுவாக லேசான காய்ச்சல், சோர்வு தளர்ச்சி, பசியின்மை ஆகிய அறிகுறிகளுடன் துவங்கும். பின் உடலில் சிறிய நீர் திவலைகள் போன்ற கொப்பளங்கள் தோன்றி உடலெங்கும் பரவும். ஓரிரு நாட்களில் வெடித்து பின் உடைந்து காய்ந்து விடும். சின்னம்மையானது பெரியவர்களுக்கு சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர் ஆகியோருக்கு தீவிர பாதிப்பு ஏற்படலாம். எனவே, குழந்தைகளுக்கு அந்நோய் வராமல் இருக்க தனியார் மருத்துவமனைகளில் சின்னம்மை தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் தேசிய தடுப்பூசி திட்டத்தில், சின்னம்மை தடுப்பூசி கிடையாது. பாதிக்கப்படும் குழந்தைகளின் அனைத்து கொப்புளங்களும் காய்ந்து விழும் வரை 10 நாட்கள் வரை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Health Department ,Vellore ,Public Health Department ,Tamil Nadu ,
× RELATED எடப்பாடி பழனிசாமி பெயரில் ரூ.50 லட்சம்...