×

திருச்சியில் பலத்த காற்றுடன் மழை: 200 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தது

திருச்சி: கடலோரத்தில் ராயலசீலா முதல் மன்னார் வளைகுடா வரை நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. திருச்சி மாநகரில் 9 மணியளவில் மழை தொடங்கியது. காற்று, இடி மின்னலுடன் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சுமார் 2 மணி நேரம் மழை நீடித்தது.இதன்காரணமாக மேஜர் சரவணன் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே இருந்த மரத்தின் கிளை முறிந்து மின் ஒயரில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காற்றுடன் பெய்த மழையால் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது.

இதேபோல் சமயபுரம், மண்ணச்சநல்லூர், துவாக்குடி உள்பட திருச்சியில் பல இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை காரணமாக வயலூர், எட்டரை, கோப்பு, மேலவயலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 200 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தது. தார் அறுக்கும் தருவாயில் இருந்த வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சேத மதிப்பு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். திருச்சியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. டெல்டாவில் தஞ்சை உள்பட ஒரு சில இடங்களில் இரவு பலத்த மழை பொழிந்தது.

Tags : Trichy ,Tamil Nadu ,Rayalaseela ,Gulf of Mannar ,
× RELATED சாத்தான்குளம் தந்தை – மகன் காவல் நிலைய...