சென்னை: மேலூர் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்பி பி.விஸ்வநாதன் போட்டியிடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டெல்லி தலைமை நேற்று அறிவித்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது பொன்னேரி (தனி), பெரும்புதூர் (தனி), சோளிங்கர், ஊட்டி, ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, வைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர் (தனி), கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன் கோவில், மேலூர் ஆகிய ஒதுக்கப்பட்டன. கடந்த 3ம் தேதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். இதில், மேலூர் சட்டப்பேரவை தொகுதியை தவிர எஞ்சியுள்ள 27 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டது. இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேட்புமனு தாக்கலுக்கு இன்று ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் பெயர் ஏன் அறிவிக்கப்படவில்லை என்ற கேள்வி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் அந்த பகுதியை சேர்ந்த சி.ஆர்.சுந்தர்ராஜன் என்ற தொழில் அதிபர் பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. அதே போன்று, விருதுநகர் தொகுதி எம்.பி.மாணிக்கம் தாகூர் தனது உறவு பெண்ணுக்கு சீட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். அதே நேரத்தில், காஞ்சீபுரம் தொகுதி முன்னாள் எம்.பி.விஸ்வநாதனும் பொது தொகுதியான மேலூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைத்துறை மாநில தலைவராக இருக்கும் வக்கீல் எஸ்.ஜெயசிம்மாவும் மேலூர் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வந்தார். மேலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு வகையில் முக்கியமானவர்களாக இருந்தனர். இதனால் யாருக்கு வாய்ப்பு சீட் வழங்குவது என்பதில் கடும் தயக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாக மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பெயர் மட்டும் வெளியிடப்படாமல் இருந்ததாக தகவல் வெளியானது. சோனியா காந்தியின் ஆலோசனை பெற்று மேலூர் தொகுதி வேட்பாளரை அறிவிக்கலாம் என்றும், அந்த தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இன்று ஒரு நாள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளது. இதனால் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோசனையில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து மேலூர் தொகுதியில் முன்னாள் எம்பி விஸ்வநாதனை களமிறக்க டெல்லி மேலிடம் முடிவு செய்தது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மதுரை மாவட்டம் மேலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பி.விஸ்வநாதன் போட்டியிடுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.விஸ்வநாதன் 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராக இருந்து வருகிறார். மேலும், தெலங்கானா மாநில பொறுப்பாளராகவும் இருக்கிறார். தேர்தலில் போட்டியிட தனக்கு பொது தொகுதி வேண்டும் என விஸ்வநாதன் அண்மையில் கேட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது அவர் மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விஸ்வநாதன் அளித்த பேட்டியில், “மேலூர் தொகுதி என்பது எனக்கு புதிதல்ல, கடந்த 2001ம் ஆண்டில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமாணிக்கத்துடன் இணைந்து தொகுதியின் அனைத்து கிராமங்களுக்கும் பயணித்துள்ளேன். கடந்த 25 வருடங்களாக எனக்கு இந்தத் தொகுதி பரிச்சயம். எனவே மேலூர் தொகுதியில் கடுமையாக பணியாற்ற காத்திருக்கிறேன். பொது தொகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த என்னை காங்கிரஸ் நிறுத்தி களம் காண்கிறது” என்றார். மேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் பெரியபுள்ளான் என்கிற செல்வம், நாதக சார்பில் கோட்டைக்குமார், தவெக சார்பில் மதுரை வீரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
