- மத்திய அமைச்சர்
- அமித் ஷா
- சென்னை
- புதுச்சேரி
- பாஜக
- சென்னை விமான நிலையம்
- அஇஅதிமுக
- தமிழ்நாடு சட்டமன்றம்
- பாஜக…
சென்னை: புதுச்சேரியில் தேர்தல் பரப்புரைக்காக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் பாஜ தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையும் நடத்துகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ இடம் பெற்றுள்ளது. இதில் பாஜ 27 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த முறை கடந்த தேர்தலில் பெற்ற வெற்றிகளை விட அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில், பிரதர் மோடி, பாஜ தேசியத் தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தமிழகம் வர உள்ளனர். அந்த வகையில் கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்து 2 நாட்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா வருகை இன்று தமிழகம் வர உள்ளார். இன்று மாலை 3.15 மணிக்கு கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
சென்னையில் இருந்து மதியம் 3.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும் அவர், அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பிரசாரத்தை முடித்துவிட்டு மாலை 6.10 மணிக்கு மீண்டும் சென்னை திரும்பும் அமித்ஷாவை, விமான நிலையத்தில், தமிழக பாஜ மூத்த தலைவர்கள் வரவேற்கின்றனர். தொடர்ந்து, முக்கியப் பிரமுகர்கள் ஓய்வறையில், தமிழக பாஜ தலைவர்களைச் சந்தித்து தேர்தல் நிலவரம், பிரசார யுக்திகள் மற்றும் பிரதமர் மோடியுடன் ஏற்கெனவே நடந்த ஆலோசனைகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை அமித் ஷா நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனைகள் முடிந்த பிறகு, இரவு தனி விமானம் மூலம் அமித்ஷா டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அதே வேளையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.
இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் ராகுல் காந்தியை, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்க உள்ளனர். விமான நிலைய ஓய்வறையில் சிறிது நேரம் கட்சித் தலைவர்களுடன் தமிழக தேர்தல் சூழல் குறித்து ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார். அதன்பின்பு, சிறிய ரக விமானம் மூலம் சென்னையிலிருந்து புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். மேலும், ராகுல் காந்தி புதுச்சேரியில் இருந்து மீண்டும் சென்னை திரும்பும் திட்டம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒரே நாளில் இரண்டு முக்கிய தலைவர்கள் சென்னை வருவது தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
