×

சிசிடிவிகள், ஆப்கள் மூலமாக வெளிநாட்டு உளவு நடவடிக்கை: உண்மையை அரசு மறைப்பதாக ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஆப்கள் மூலமாக நடக்கும் உளவு நடவடிக்கை குறித்த உண்மையை அரசு மறைப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில்,‘‘சீனாவின் சிசிடிவி கேமராக்களை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அரசு சமீபத்தில் தடை விதித்திருந்தது. எனினும் அரசு கட்டிடங்களுக்குள் சீன கேமராக்கள் தொடர்ந்து நிறுவப்பட்டே இருக்கின்றன. தடை செய்யப்பட்ட சீனச் செயலிகள் மாற்றியமைக்கப்பட்ட பெயர்களில் மீண்டும் தலைதூக்கி வருகின்றன. வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவு தளங்கள் முக்கியமான தரவுகளைச் செயலாக்கி வருகின்றன. ஆனால் இது குறித்து சொல்வதற்கு அரசிடம் எதுவும் இல்லை. இந்தியாவை இருளில் வைத்திருப்பதற்கான ஒரு திட்டமிட்ட சதி இது.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான நான் நாடாளுமன்றத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இந்த கேள்விகளை எழுப்பினேன். அதற்கு அளிக்கப்பட்ட பதிலில் வெறும் வார்த்தை ஜாலங்களே நிறைந்திருந்தனவே தவிர கேட்கப்பட்ட குறிப்பிட்ட கேள்விகளுக்கு எந்தவித பதிலும் அளிக்கப்படவிலலை. நமது கேமரா்கள் எந்தெந்த நாடுகளில் இருந்து பெறப்பட்டன? பாதுகாப்பு கண்ணோட்டத்தில் அவற்றில் எத்தனை சான்றளிக்கப்பட்டவை? எந்தெந்த வெளிநாட்டு ஏஐ தளங்கள் அரசு தரவுகளை செயலாக்கி வருகின்றன? தடை செய்யப்பட்ட எந்தெந்த செயலிகள் மாற்றியமைக்கப்பட்ட பெயர்களில் தொடர்ந்து இயங்கி வருகின்றன? அமைச்சகத்தின் பதிலில் எந்தவித புள்ளிவிரங்களோ, பதில்களோ இல்லை ஏன்? ஒரே ஒரு தளத்தின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Rahul ,New Delhi ,Congress ,Rahul Gandhi ,Lok Sabha ,Facebook ,China ,
× RELATED மும்மொழிக் கொள்கை பற்றி ஒன்றிய...