×

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி 7 நீதிபதிகள் அதிரடி சிறைபிடிப்பு: மேற்குவங்கத்தில் பரபரப்பு, பல மணி நேரத்திற்கு பின் மீட்பு

கொல்கத்தா: வாக்காளர் பெயர் நீக்க விவகாரத்தில் மேற்குவங்கத்தில் 7 நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் 7 நீதிபதிகள் பணியில் ஈடுபட்டனர். மூன்று நீதிபதிகள் உட்பட காளியாசக் 2 வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 7 நீதிபதிகளும் பணியில் இருந்த போது நேற்றுமுன்தினம் சுமார் 4 மணி அளவில் ஏராளமான போராட்டக்காரர்கள் அவர்களை முற்றுகையிட்டனர்.

எஸ்ஐஆர் செயல்முறையின் கீழ் வாக்காளர்களின் பெயர்கள் பெருமளவில் நீக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலை 12-ஐயும் (கொல்கத்தா-சிலிகுரி) மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு வரை அவர்களை மீட்க முடியவில்லை. நேற்று அதிகாலை பாதுகாப்புப் படையினரின் ஒரு பெரிய குழு அவர்களை மீட்டது. அதை தொடர்ந்து நீதிபதிகளை ஏற்றிச்சென்ற வாகனங்களைச் சாலையில் மூங்கில் கம்புகளை வைத்து மறிக்கவும், கார்களைச் சேதப்படுத்தவும் போராட்டக்காரர்கள் முயன்றனர்.

அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது வாகனங்கள் மோதியதில் சில போராட்டக்காரர்கள் காயமடைந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. போராட்டக்காரர்கள் முதலில் நீதிபதிகளைசந்தித்துப் பேச அனுமதி கோரியிருந்தனர். அவர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டனர். கிட்டத்தட்ட சுமார் 9 மணி நேரம் நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்ப வம் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

மீட்கப்பட்ட பின்னரும் அவர்கள் சென்ற வாகனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. நீதிபதிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் பெரும் பதற்றத்தை மேற்குவங்கம் முழுவதும் உருவாக்கி உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை தலைமை இயக்குநரிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது. இந்த வழக்கில் நேற்று இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சி வேட்பாளர் மவுலானா ஷாஜகான் அலி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை 10 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பா.ஜ கலவரத்தை தூண்டுகிறது
மால்டாவில் நீதிபதிகள் முற்றுகை விவகாரத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பா.ஜ கலவரத்தை தூண்டுவதாக முதல்வர் மம்தா குற்றம்சாட்டினார். இதுபற்றி அவர் கூறுகையில்,’ எனது அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன, மேற்குவங்கம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, சிறப்புத் தீவிர மறுஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த ஏழு நீதிபதிகள் முற்றுகையிடப்பட்ட மால்டா சம்பவம் குறித்து நிர்வாகத்தில் இருந்து யாரும் எனக்குத் தெரிவிக்கவில்லை. நீதிபதிகளையோ நீதித்துறை அதிகாரிகளையோ யாரும் தொடக்கூடாது. இது அமித்ஷாவின் சதி. மேற்குவங்கத்தில் தேர்தலை ரத்து செய்துவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதே பாஜவின் சதித்திட்டமாகும்’ என்றார்.

* மம்தா இல்லம் அருகே மோதல்
முதல்வர் மம்தா போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் நேற்று பா.ஜ வேட்பாளர் சுவேந்து அதிகாரி ஊர்வலமாக சென்று மனுத்தாக்கல் செய்தார். ஊர்வலம் காளிகாட் பகுதியை நெருங்கியது. குறிப்பாக முதல்வர் மம்தா பானர்ஜியின் இல்லத்திலிருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும் ஆதரவாளர்களும் சாலையோரத்தில் திரண்டனர். இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை கலைத்தனர்.

* மேற்குவங்கம் முழுவதும் போராட்டம்
மேற்குவங்க சட்டப்பேரவைக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் அங்கு எஸ்ஐஆர் பணிக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் சாலைகளையும் நெடுஞ்சாலைகளையும் மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

* என்ஐஏ வசம் விசாரணை ஒப்படைப்பு
மேற்குவங்கத்தில் 7 நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது அவர் கூறியதில்,\\”இந்த விவகாரத்தில் மூன்று பெண் நீதிபதிகள் உள்பட ஏழு நீதிபதிகளை முற்றுகையிட்டு தடுத்து சிறை பிடித்துள்ளது என்பது மிகவும் கவலையான ஒன்றாக உள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள் நீதிபதிகளை மிரட்டுவதற்கும், விசாரணை செயல்முறையைத் தடம் புரளச் செய்வதற்கும், மற்றும் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில் நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டதாகும்.

வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தேர்தல் ஆணையம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். குறிப்பாக இந்த விவகாரத்தில் தேவையான ஒன்றிய அரசின் படைகளை நியமிக்க வேண்டும்.. தற்போது பணியில் உள்ள தலைமை செயலாளர், டி.ஜி.பி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஏன் இந்த போராட்டத்தை தடுக்கமுடியவில்லை என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.

மேலும் நீபதிகள் மீதான இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சி.பி.ஐ அல்லது என்.ஐ.ஏ அமைப்புகள் மூலம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றால், மேற்கு வங்கம் போன்று பிளவுபட்ட ஒரு மாநிலத்தை பார்க்கவில்லை நாங்கள் பார்த்தது கிடையாது’ என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார். இதையடுத்து இந்த வழக்கை என்ஐஏ வசம் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஒப்படைத்தார். என்ஐஏ அதிகாரிகள் இன்று மேற்குவங்கம் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

Tags : West Bengal ,Kolkata ,Malda district ,
× RELATED திருமணம் ஆகாமலே கர்ப்பத்தை அறிவித்த நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி