கோவை, ஏப். 2: மகாவீர் ஜெயந்தி தினத்தில் கோவை மாநகரில் பதுக்கி வைத்து மது விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 721 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்திருந்தது. இந்த நிலையில், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களை பிடிக்க போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது போத்தனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மது விற்ற சண்முகராஜ் (25), காயத்ரி (25), மற்றும் கலையரசன் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே மது விற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (32) என்பவரையும், வடவள்ளி போலீசார் கிஷோர்குமார் (36) என்பவரையும் கைது செய்தனர்.
பீளமேடு பகுதியில் நின்றிருந்த ஆட்டோ ஒன்றைச் சோதனை செய்தபோது, அதில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், கெம்பட்டி காலனியில் மது விற்ற நாகராஜ் (39) என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து மது பாட்டில்கள் மற்றும் விற்பனைப் பணம் ரூ.1100 பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் இருந்து மொத்தம் 721 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
