×

கோவில்பட்டியில் பல்வேறு சங்கத்தினரை சந்தித்து ஆதரவு திரட்டிய கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி, ஏப். 1: கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, 3 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 4வது முறையாக போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து நேற்று பல்வேறு சங்கத்தினரை நேரில் சென்று சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தில் உள்ள தனியார் தினசரி சந்தை நிர்வாகிகள், இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் பத்ரகாளி அம்மன் கோயிலில் அதிமுக வெற்றி பெற வேண்டி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தரிசனம் செய்தார். தொடர்ந்து நாடார் சங்கத்தினர், தீப்பெட்டி உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் மருத்துவ சமுதாய முடி திருத்துவோர் தொழிலாளர் சங்கத்தினர் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூக்கு மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் ஆதரவு தெரிவித்தனர். கடம்பூர் ராஜூ நேரில் சென்றும் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் பேசுகையில், எனக்கு முழு ஆதரவு தந்த மக்கள் நீங்கள். என்னுடைய அறிமுகம் உங்களுக்கு தேவையில்லை. கடந்த 15 ஆண்டுகளாக உங்களோடு ஒருவனாக தான் நான் பணியாற்றி கொண்டு இருக்கிறேன். மீண்டும் என்னுடைய பணி அப்படித்தான் இருக்கும் என்பதை இந்த நேரத்தில் கூறிக் கொள்கிறேன். தமிழகத்திலேயே நம்பர் ஒன் நகராட்சி கோவில்பட்டி நகராட்சி, சிறந்த நகராட்சி விருது பெற்றுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் கோவில்பட்டி தனி மாவட்டம் உருவாக்கப்படும், என்றார். அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், வழக்கறிஞரணி செயலாளர் சங்கர் கணேஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், ஜெ. பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, முன்னாள் மாவட்ட பொருளாளர் வேல்முருகன் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள், சங்கத் தலைவர்கள் உடனிருந்தனர்.

Tags : Kadambur Raju ,Kovilpatti ,Former minister ,AIADMK ,
× RELATED கோடை காலத்தில் கண்களை பராமரிக்கும் முறை