நாகர்கோவில், ஏப்.1: தமிழ்நாட்டில் வருகிற 23ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், ஆசிரியைகளுக்கு தேர்தல் பணிகளில் அந்தந்த தொகுதிகளிலேயே பணியாற்றிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று குமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, அதன் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்தலை எவ்வித புகாருக்கும் இடமின்றி நேர்மையாக நடத்துவதற்கு ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். எனினும் தேர்தல் பணியில் தொய்வின்றி பணியாற்றிட மருத்துவக் காரணங்களால் தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து இருப்பவர்களுக்கும், இன்னும் 6 மாதத்தில் ஓய்வு பெறுபவர்கள், மறு நியமனத்தில் பணி புரிகிறவர்கள் ஆகியோருக்கும் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளித்திட வேண்டும்.
ஆசிரியைகளை அந்தந்த தொகுதிகளிலேயே தேர்தல் பணியாற்றிட ஆணை வழங்கிட வேண்டும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர் -1 ஆகியோருக்கு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மனம் ஒத்த மாறுதல் பணி ஆணை வழங்கிட வேண்டும். தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்திட தேர்தல் பணி புரிவோருக்கு தாமதமின்றி தபால் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று வழங்கிட வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பென்னட் ஜோஸ், நிர்வாகிகள் கண்ணன், ஸ்டீபன், வேலவன், சுமகாசன்,பிரதீஷ் குமார், டோமினிக் ராஜ், மூட்டா மகேஷ், எட்வின் பிரகாஷ், ஹெர்பட் ராஜாசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
