திண்டுக்கல் மார்ச் 31: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நமது வாக்கு, நமது உரிமை, தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா மற்றும் எதிர்காலம் ஏற்றம் பெற வாக்களிப்போம் ஆகிய தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட விளம்பர பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கலை கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கலெக்டர் சரவணன் பேரணியை துவக்கி வைத்து பேசியதாவது: வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும். நமது வாக்கு, நமது உரிமை என்பதை குறிக்கோளாக கொள்ள வேண்டும். இளைய தலைமுறையினராகிய மாணவியர்கள் இந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து வருவதில் பெருமிதம் கொள்கிறேன். மேலும், மாணவியர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்தும் குறித்து தங்களுடைய நண்பர்களுக்கும், தங்களுடைய வீட்டின் அருகே வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026ல் 100 சதவீத வாக்குப்பதிவை நிலைநிறுத்துவதற்கு உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்வேன் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். விழிப்புணர்வு பேரணி எம்விஎம். கல்லூரியில் துவங்கி ஆர்எம் காலனி, வண்டிப்பாதை, தாடிக்கொம்பு ரோடு வழியாக மீண்டும் கல்லூரியில் வந்து நிறைவடைந்தது. இதில் மாணவியர்கள் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ் பாபு, திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் பானுலட்சுமி, கேபிள் டி.வி. தனி தாசில்தார் மங்கள பாண்டியன், எம்விஎம் அரசு மகளிர் கலை கல்லூரி முதல்வர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
