சிவகங்கை, மார்ச் 31: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். தமிழகம் முழுவதும் ஏப்.23ல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. நேற்று முதல் ஏப்.6ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு சிவகங்கை ஆர்டிஓ அலுவலகம், மானாமதுரை தொகுதிக்கு மானாமதுரை தாலுகா அலுவலகம், காரைக்குடி தொகுதிக்கு தேவகோட்டை சப்-கலெக்டர் அலுவலகம், திருப்பத்தூர் தொகுதிக்கு திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மனுத்தாக்கல் செய்வதற்கான முதல் நாளான நேற்று சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இந்துஜா, காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மானாமதுரை தொகுதியில் போட்டியிடும் சண்முகபிரியா, திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் ரம்யாமோகன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
மேலும் சுயேட்சைகள் மற்றும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் அனைத்து தொகுதி அலுவலகங்களில் இருந்தும் வேட்பு மனு பூர்த்தி செய்வதற்கான மனுக்களை வாங்கி சென்றனர். வரும் நாட்களில் முக்கிய கட்சிகள் சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
