வத்திராயிருப்பு, மார்ச் 31: பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்கின்றனரா என பக்தர்களின் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்த பின்னர் அனுமதித்தனர்.
இதன்பிறகு மலையேறி சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த பிரதோஷ வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
