×

தமிழ் மொழி புறக்கணிப்பு; தேர்தல் ஆணைய இணையதளத்தில் இந்தி மொழியில் கட்சியின் பெயர்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

 

சென்னை: வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே கட்சியின் ெபயர் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 15ம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல் செய்ய குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டதால், முதல் நாளிலிருந்தே வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர்.

அதன்படி, கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பாளர்களின் விவரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான affidavit.eci.gov.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு 9 மணி நிலவரப்படி சுமார் 561 வேட்பாளர்களின் விவரங்கள் பதிவாகியிருந்தன. ஆனால், ேவட்பாளர்கள் முழு விவரங்களில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழில் எந்தவித குறிப்பும் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாநில தேர்தலில், அந்த மாநிலத்தின் தாய்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு என அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்த விவகாரம் மொழி உரிமைக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தமிழை புறக்கணிக்கும் இந்த நடைமுறைக்கு எதிராக பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ‘தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் தமிழுக்கு இடமில்லை என்றால் அது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு, வேட்பாளர் விவரங்களில் தமிழையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Election ,Election Commission ,Chennai ,Tamil Nadu ,
× RELATED 23 காவல்அதிகாரிகள் இன்று பணி ஓய்வு