×

தேஜகூ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்: மயிலாப்பூரில் ஏப்.4ம் தேதி பிரதமர் மோடி ரோடு ஷோ

 

சென்னை, : தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வரும் 4ம் தேதி சென்னை மயிலாப்பூரில் ரோடுஷோ சென்று பிரசாரம் செய்ய உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகளின் பிரசாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நேற்று காஞ்சிபுரத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். அதேபோல அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்.3ம் தேதி புதுச்சேரியில் பிரசாரம் செய்யும், பிரதமர் மோடி 4ம் தேதி சென்னை வர உள்ளார். அன்றைய தினம் சென்னை மயிலாப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

அந்த தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் பாஜ சார்பில் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். மேலும், பிரமாண்ட ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மற்றும் கோவை பகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரதமர் மோடி விரைவில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Tejashwi ,Modi ,Mylapore ,Chennai ,Mylapore, Chennai ,Tamil Nadu Assembly ,
× RELATED 23 காவல்அதிகாரிகள் இன்று பணி ஓய்வு