×

கோடைகாலத்தால் சின்னம்மை நோய் அதிகரிப்பு: 1300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

 

சென்னை: கோடைகாலம் என்பதால் சின்னம்மை நோய் அதிகரித்து, தமிழகத்தில் 1300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வழக்கமாக ஏப்ரல் மாதத்திலிருந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக தொடங்கிவிட்டது. இதனால், வெயில் காலத்தில் வரக்கூடிய தட்டம்மை, சின்னம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கி (measles, chickenpox, mumps) போன்ற நோய்களின் தாக்கம் தமிழ்நாடு முழுவதும் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் தவிர, ஆங்காங்கே தனியார் மருத்துவமனைகளிலும் இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 1,320 பேர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டும் 476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் 96 வழக்குகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 50 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலத்தில் சுமார் 1,000 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இது பொதுவாக கோடைக்காலத்தில் அதிகரிக்கும் ஒரு பருவகால வைரஸ் நோய்தான். ஆனால் இந்த ஆண்டு வெப்பநிலை விரைவாக அதிகரித்ததால் நோய் பரவல் அதிகரித்துள்ளது. வருகிற வாரங்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் காய்ச்சல், சளி அல்லது தோல் சிரங்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நோய் பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வைரஸ் மூச்சுத் துளிகள் மூலம் பரவுவதால், நோயாளிகள் குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகியோரிடமிருந்து தனியாக இருக்க வேண்டும். மேலும், உடல் நீர்ச்சத்தைப் பாதுகாக்க ஓஆர்எஸ் (Oral Rehydration Solution) போன்ற பானங்களை உட்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

கடந்த நான்கு வாரங்களாக மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் (OP) எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பெரும்பாலும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதேசமயம், முன்பு தடுப்பூசி எடுக்காத இளைஞர்களிடமும் இந்த நோய் காணப்படுகிறது. எனவே தடுப்பூசி எடுக்காதவர்கள் உடனடியாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED 23 காவல்அதிகாரிகள் இன்று பணி ஓய்வு