சென்னை: பிரபல நடிகரும், கார் ரேசருமான அஜித்குமார் தனது சொந்த அணியான “அஜித் குமார் ரேசிங்” அணி மூலம் பல்வேறு கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், இத்தாலியில் கடந்த 22ம் தேதி வரை நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்று விட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள மல்லீகேஸ்வரர் கோயிலுக்கு திடீரென வந்து, சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்து, தகவலறிந்து ஏராளமான ரசிகர்கள் அஜித்குமாருடன் செல்பி மற்றும் போட்டோ எடுக்க மேற்கு ராஜ வீதியில் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து, நடிகர் அஜித்குமார் உடனடியாக காரில் ஏறி சென்னை புறப்பட்டார். முன்னதாக, நடிகர் அஜித் குமாருக்கு அவரது நண்பர் ஒருவர் 11 முகம் கொண்ட ருத்ராட்சத்தை கழுத்தில் அணிவித்தார்.
