திருவண்ணாமலை, மார்ச் 31: திருவண்ணாமலையில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி, நூறு சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய, மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பான செயல்விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. குறிப்பாக, முதன்முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள், நூறு சதவீதம் வாக்களிக்க தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காமராஜர் சிலை அருகே இருந்து தொடங்கியது. அதனை, கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். அதில், ‘‘என் வாக்கு, என் உரிமை’’, ‘‘என் கடமை, நூறு சதவீதம் வாக்களிப்போம்’’, நேர்மையாக வாக்களிப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். நகரின் பிரதான சாலைகள் வழியாக சென்ற ஊர்வலம், அரசு கலைக் கல்லூரி அருகே நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், மாநராட்சி ஆணையர் செல்வபாலாஜி, கல்லூரி முதல்வர் ரேவதி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறும் திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
