செய்யாறு, மார்ச் 29: செய்யாறு அடுத்த தென்னம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(55). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில் இவரது மூத்த மகன் அமரன்(32) என்பவர், தனது மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். மேலும் சரியாக வேலைக்குச்செல்லாமல் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனை செல்வராஜ் கண்டித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி மாலை மதுபோதையில் வீட்டிற்கு வந்த அமரனை, செல்வராஜ் கண்டித்துள்ளார். அப்போது அவரை ஆபாசமாக பேசி கீழே தள்ளி பீர்பாட்டிலால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து செல்வராஜ், பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அமரனை தேடி வருகிறார்.
