×

மயாமி ஓபன் டென்னிஸ் சபலென்கா சாம்பியன்: ரூ.11 கோடி பரிசு பெற்றார்

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் மயாமி நகரில் மயாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று, பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா (27), அமெரிக்காவை சேர்ந்த உலகின் 4ம் நிலை வீராங்கனை கோகோ காஃப் (22) உடன் மோதினார்.

முதல் செட்டில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை குவித்த சபலென்கா, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். 2வது செட்டில் சுதாரித்து ஆடிய காஃப், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் வகையில் நடந்த 3வது செட்டில் மீண்டும் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-3 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வென்றார்.

அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இத்துடன் சேர்த்து, 24 டபிள்யுடிஏ சாம்பியன் பட்டங்களை அவர் வென்றுள்ளார். அவருக்கு பரிசுத் தொகையாக, ரூ. 10.82 கோடியும், 1000 புள்ளிகளும் வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த கோகோ காஃப்புக்கு ரூ.5.75 கோடி பரிசு கிடைத்தது.

Tags : Miami Open Tennis ,Miami ,Aryna Sabalenka ,Belarus ,Miami Open Tennis Women's Singles Final ,Miami Open Tennis Tournament ,Miami, USA… ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு...