மும்பை: ஐபிஎல் தொடரின் 2வது போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. ஐபிஎல் 19வது தொடரின் 2வது போட்டி மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அஜிங்கிய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. ஐபிஎல் போட்டிகளில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற வலிமை வாய்ந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்கிறது. இருப்பினும் கடந்தாண்டு நடந்த குவாலிபையர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்து 3ம் இடத்தை பிடித்தது.
இந்தாண்டு, 6வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்கும் முனைப்பில் மும்பை தீவிரமாக களமாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா என, நட்சத்திர வீரர்களின் பட்டாளம் அணிவகுத்து நிற்கிறது. தீபக் சஹர், ஷர்துல் தாக்குர், பும்ரா போன்ற வீரர்களால் மும்பை அணி, எதிரணியை மிரள வைப்பதாக காணப்படுகிறது. மறுபுறம், 3 முறை சாம்பியனாகி உள்ள கொல்கத்தா அணியில் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், பிசிசிஐ அறிவுறுத்தலால் வெளியேற்றப்பட்டார்.
ஆகாஷ் தீப், ஹர்சித் ராணா ஆகியோர் காயம் காரணமாக ஆடாதது பின்னடைவு. அதனால் கடைசி நேரத்தில் ஜிம்பாப்வே பந்து வீச்சாளர் பிளெஸிங் முஸராபானி சேர்க்கப்பட்டார். மேலும், சென்னையில் இருந்து வந்த ரச்சின் ரவீந்திரா, மதீஷா பதிரனா ஆகியோருடன், வருண் சக்ரவர்த்தியும் கொல்கத்தா அணிக்கு பலம் சேர்ப்பார்கள். பேட்டிங்கில் ரிங்கு சிங், ஃபின் ஆலன் ரஹானே பட்டையை கிளப்புவர். அதனால், இன்றைய போட்டியில் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
