×

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமமுகவில் 11 வேட்பாளர்கள் அறிவிப்பு

 

* 2 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
* பெண்கள் யாரும் இடம் பெறவில்லை

சென்னை: அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். சென்னையில் சைதாப்பேட்டை, பூந்தமல்லி (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளும், மற்ற மாவட்டங்களில் பெரியகுளம் (தனி), மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம் (தனி), திருச்சி (மேற்கு), மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளும் என மொத்தம் 11 தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை டிடிவி.தினகரன் நேற்று அறிவித்தார். இதில் செந்தமிழன், சி.சண்முகவேலு ஆகியோர் முன்னாள் அமைச்சர்கள்.

பட்டியிலில் பெண்கள் யாரும் இடம்பெறவில்லை. இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அமமுக சார்பில் 11 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். அதன்படி, பெரியகுளம் தொகுதியில் டாக்டர் கே.கதிர்காமு, மன்னார்குடி தொகுதியில் காமராஜ், திருவையாறு தொகுதியில் வி.கார்த்திகேயன், காரைக்குடி தொகுதியில் தேர்போகி பாண்டி, திருப்பத்தூர் தொகுதியில் ஞானசேகர், நாங்குநேரி தொகுதியில் இசக்கிமுத்து, ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தரராஜன், திருச்சி (மேற்கு) தொகுதியில் ராஜசேகரன், சைதாப்பேட்டை தொகுதியில் செந்தமிழன், பூந்தமல்லி தொகுதியில் டி.ஏ.ஏழுமலை, மடத்துக்குளம் தொகுதியில் சி.சண்முகவேலு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சண்முகவேலு, செந்தமிழன், கதிர்காமு, சுந்தரராஜன், ஏழுமலை ஆகியோர் ஜெயலலிதாவால் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எங்கள் வேட்பாளர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்ற எண்ணத்துடன் போட்டியிடுகிறார்கள். அமமுக சார்பில் 120 தேர்தல் வாக்குறுதிகள் வழங்கியுள்ளோம். அதில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 85 சதவீதம் தமிழர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும், கனிம வளம் எடுப்போர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், சாதி வாரி கணக்கெடுப்பு மாநில அரசு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அனைத்தும் அதிமுக தலைமையில் ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றப்படும்.

ஏப்ரல் 6ம் தேதி முதல் பிரசாரம் தொடங்க உள்ளேன். எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மொத்தம் 16 தொகுதிகள் கேட்டோம். ஆனால் அது முடியவில்லை. டெல்டா பகுதியில் ரெங்கசாமிக்கு கொடுக்க இருந்தோம். ஆனால் தொகுதி கிடைக்கவில்லை. 10 தொகுதிகள் நாங்கள் கேட்டது தான் கொடுத்தார்கள். சசிகலா வருவதால் எங்கள் வெற்றியை பாதிக்காது. கூட்டணி சுமுகமாக முடிய டெல்லி சென்று வந்தோம். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றத்திற்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். 11 தொகுதியிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : National Democratic Alliance ,AMMK ,Chennai ,general secretary ,TTV Dinakaran ,Saidapet ,Poonamalli ,
× RELATED 18 தொகுதிகளில் திமுக- பாஜ நேரடி மோதல்: 5...