ராமதாஸ்- அன்புமணி மோதலால் பாமக இரண்டாக உடைந்துள்ளது. அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறார். ஆனால் ராமதாசோ எந்த கூட்டணியிலும் இணைய முடியாமல் தவித்து வந்தார். அவர் தனித்து போட்டியிடக்கூடிய சூழ்நிலையில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா தனக்கு துரோகம் இழைத்தவர்களை பழிவாங்கும் வகையில் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட களம் இறங்கியுள்ளார். இதற்காக ராமதாசை சந்தித்து புதிய கூட்டணியையும் ஏற்படுத்தியுள்ளார்.
நீண்ட நாட்களாக கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், யாரும் எதிர்பாராத விதமாக சசிகலா தொடங்கிய புதிய கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். வட மாவட்ட மற்றும் தென் மாவட்டங்களில் இருக்கும் வன்னியர் மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மெஜாரிட்டியாக இருக்கும் முக்குலத்தோர் ஓட்டுகளை இந்த கூட்டணி நிச்சயம் பிரிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் தனக்கு துரோகம் இழைத்த அதிமுக தலைவர்களின் வெற்றிக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கிறார்.
இந்நிலையில் பாமக செயல் தலைவர் காந்தி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சசிகலாவை சந்தித்துள்ளனர். அதேபோல் நவரச நாயகன் நடிகர் கார்த்திக், சசிகலாவை நேற்று போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடும் ராமதாஸ்-சசிகலா கூட்டணிக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக நடிகர் கார்த்திக் கூறியுள்ளார். அதோடு, சசிகலா தரப்புக்கு ஆதரவாக கார்த்திக் பிரசாரம் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு, அனைத்திந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கார்த்திக், பின்னர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கினார். பின்னர் அந்த கட்சியைக் கலைத்து மனித உரிமை காக்கும் கட்சி என்ற கட்சியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தென்மாவட்ட வாக்குகளை வளைக்க திட்டமிட்டுள்ளதாக இந்த புதிய கூட்டணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
