1. அதிமுக கூட்டணியில் இருந்து உங்கள் கட்சி, திமுக கூட்டணியில் இணைவதற்கான காரணம் என்ன?
நான் இன்று, நேற்று, போன மாதம் வந்திருந்தால் இந்த கேள்வி அர்த்தமுள்ளதாக இருக்கும். 2019ம் ஆண்டு பாஜ, அதிமுக கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் உருவானதில் இருந்து அந்த கூட்டணியை விட்டு நான் வெளியேறிவிட்டேன். அப்போது கோவையில் இன்றைய முதல்வர் தலைமையில் நடைபெற்ற திமுக கூட்டணி பொதுக்கூட்ட மேடையேறி நான் அதிமுக, பாஜ கூட்டணியையும் விமர்சித்தேன், எதிர்த்தேன், பிரச்சாரம் செய்தேன். அதன் பிறகு 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவோடு வாக்கு சேகரித்தேன். தமிழ்நாடு முழுக்க எங்களுடைய மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்றினார்கள். இப்பொழுது அதையெல்லாம் கவனித்து வந்த நம்முடைய முதல்வர், இந்த தேர்தலில் எங்களுடைய மனிதநேய ஜனநாயக கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு தந்திருக்கிறார். எனவே நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கொள்கை ரீதியாக செயல்பட்டு வருகிறோம்.
2. பாஜவை திமுக எதிர்ப்பதன் ஒரே காரணத்தினால் தான் நீங்கள் திமுக அணி பக்கம் வந்துள்ளீர்களா?
அப்படி சொல்லிவிட முடியாது. ஏனென்று சொன்னால் திமுக என்பது ஒரு கொள்கை சார்ந்த மக்கள் இயக்கம். யாரையும் எதிர்க்க வேண்டும் என்பது திமுகவின் கொள்கையல்ல. தமிழர்களை, திராவிடர்களை வாழ வைக்க வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை. திமுக சமூகநீதி, மதச்சார்பின்மை, மனிதநேய சிந்தனைகள், தமிழருடைய வாழ்வுரிமைகள் என்ற அடிப்படையில் சிந்தித்து செயலாற்றக் கூடிய ஒரு கட்சி என்ற அடிப்படையில் திமுகவின் மீது நமக்கு எப்போதும் பெரும் மரியாதை உண்டு. திமுகவுடைய கொள்கைகளின் மீது நாம் கொண்ட மரியாதையின் காரணமாகவும் வகுப்புவாதத்தையும் சமூகநீதிக்கு எதிரான சக்திகளையும் எதிர்க்கக்கூடிய அரசியல் துணிச்சல் திமுகவிடம் இருக்கின்ற காரணத்தினாலும் நாம் திமுகவை நேசிக்கிறோம் அந்த அணியிலே பயணிக்கிறோம்.
3. இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை முஸ்லிம்களுக்கும் பாஜ எதிரானதா?
பாஜ என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமே எதிரானது என்பது தவறானது. அது மொத்த இந்திய மக்களுக்கும் எதிரான ஒரு அரசியல் கட்சி. 3 சதவீத மக்களுடைய நலன்களை பாதுகாப்பதற்காக இந்த மண்ணில் வாழக்கூடிய 97 சதவீத மக்களுடைய எதிர்காலத்தையும் வாழ்வுரிமைகளையும் அழிக்கக்கூடிய மோசமான சித்தாந்தங்களை கொண்ட ஒரு கட்சியாக அது இருக்கிறது. எனவே, இது முஸ்லிம்களுக்கோ இதர சிறுபான்மையினருக்கோ மட்டும் எதிரான கட்சி அல்ல, இந்த மண்ணில் இருக்கக்கூடிய 97 சதவீத மக்களுக்கு எதிரான கட்சி என்பதுதான் உண்மை.
4. ஒருவேளை உங்களுக்கு திமுக கூட்டணியில் தந்திருக்கக் கூடிய அந்த ஒரு சீட் கிடைக்காமல் இருந்திருந்தால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும்?
2019 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொள்கை ரீதியாக இந்த அணியை ஆதரித்தோம் என்று நான் ஏற்கனவே சொன்னேன். 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் தொகுதி கேட்டபோது எங்களால் தற்போது கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என்று திமுக தலைமை சொன்னபோதும், வேறு கூட்டணிக்குச் செல்ல வாய்ப்பு இருந்தும் அதை நிராகரித்து விட்டு இதே கூட்டணியில் நாங்கள் பயணித்தோம். இப்பொழுதும் கூட கொள்கை ரீதியாகத்தான் நாங்கள் பயணிக்கின்றோம். ஒரு தொகுதியை தராவிட்டாலும் கூட நாங்கள் திமுக அணிக்கு ஆதரவு கொடுத்துவிட்டு நிபந்தனையற்ற முறையிலே பிரசாரம் செய்திருந்திருப்போம். அந்த நிலையில் எங்களுக்கு எப்போதும் மாறுபட்ட கருத்து இருந்திருக்காது.
