திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நேமம் தொகுதி கேரளாவில் ஒரு நட்சத்திர தொகுதியாக கருதப்படுகிறது. 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் தான் இந்தத் தொகுதியை பாஜ முதன்முதலாக கைப்பற்றியது. இதன்மூலம் மூத்த தலைவரான ஓ. ராஜகோபால் கேரளாவில் பாஜவின் முதல் எம்எல்ஏ ஆனார். அடுத்து 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் நேமம் மட்டுமல்லாமல் கேரளாவில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பாஜ தலைவர்கள் கூறினர். ஆனால் கையில் இருந்த நேமம் தொகுதியும் பாஜவுக்கு பறிபோனது.
இந்நிலையில் இந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற பாஜ மாநில தலைவரும், முன்னாள் ஒன்றிய இணையமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் களத்தில் குதித்துள்ளார். இவரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற அமைச்சர் சிவன்குட்டி மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்எல்ஏ சபரிநாதன் களத்தில் உள்ளார். இந்நிலையில் ஒரு பொதுக்கூட்டத்தில் ராஜீவ் சந்திரசேகர் பேசும்போது, ‘‘ஒன்றிய அமைச்சராக இருந்தபோது கேரளாவுக்காக நான் எதையும் செய்ய முடியவில்லை. என்னை எம்எல்ஏவாக தேர்வு செய்தால் நேமம் தொகுதிக்காக பல புதிய திட்டங்களை கொண்டு வருவேன்’’ என்றார்.
ராஜீவ் சந்திரசேகரின் இந்தப் பேச்சை சிவன்குட்டி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் தன்னுடைய முகநூலில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அமைச்சராக இருந்தபோது கேரளாவுக்காக தன்னால் எதையும் செய்ய முடியவில்லை என்று ராஜீவ் சந்திரசேகர் கூறியதன் மூலம் கேரள மக்களை அவர் அவமானப்படுத்தி உள்ளார். இப்படிப்பட்ட ஒரு நபரை வாக்காளர்கள் எப்படி நம்புவார்கள்? பாஜவுக்கு நாட்டின் வளர்ச்சி முக்கியமல்ல. தங்களது அஜெண்டாவை நிறைவேற்றுவது தான் பாஜவின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. எதற்காக கேரளா மீது பாஜ இந்த அளவுக்கு வெறுப்பை காட்டுகிறது என்று புரியவில்லை. வரும் தேர்தலில் கேரள வாக்காளர்கள் அவர்களுக்கு நல்ல பாடத்தை புகட்டுவார்கள். இவ்வாறு சிவன்குட்டி தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
* ஒரு டிவிட் போட்டால் கூட போலீசை வைத்து மிரட்டுகிறார் அசாம் பாஜ முதல்வர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அங்கு காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இந்த முறை பாஜவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மக்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் கவுரவ் கோகாயை களம் இறக்கி உள்ளது. அவரது முயற்சியில் பாஜவுக்கு எதிராக 6 கட்சி கூட்டணி அமைக்கப்பட்டு, தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிட உள்ளார்.
இதுபற்றி அசாம் மாநிலத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘இந்தத் தேர்தல் அறிக்கை பல மாத கால உழைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது; இக்காலகட்டத்தில், எங்கள் தலைவர்களும் உறுப்பினர்களும் மாநிலம் முழுவதும் உள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைப் பெற்றனர். இந்தத் தேர்தல் அறிக்கையை கார்கே, லக்கிம்பூரில் வெளியிடுவார். அசாம் மக்கள் எங்கும் அச்சத்தில் வாழ்கின்றனர். யாரேனும் ஒருவர் சமூக ஊடகங்களில் அரசை விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டால் கூட, அந்த நாள் முடிவதற்குள் காவல்துறையினர் அவர்களின் வீட்டு வாசலுக்கே வந்துவிடுகின்றனர். அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன.
முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஊடகங்களிடம் பேசும்போதெல்லாம், தனது சொந்தக் கட்சியான பாஜவை விட எங்கள் கட்சியிலேயே அதிக கவனம் செலுத்துவதை நாங்கள் காண்கிறோம். அவர் தனக்குள்ளும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்; ஏனெனில், பாஜ ஏற்கனவே இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளது—ஒன்று பாஜ (ஹிமந்தா பிஸ்வா சர்மா பிரிவு), மற்றொன்று அசல் பாஜ. முன்னாள் முதல்வரும், ஒன்றிய அமைச்சருமான சர்பானந்தா சோனோவால் போன்ற மூத்த பாஜ தலைவர்கள், அக்கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி, இம்மாநிலத்தில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என்றார்.
* அன்புமணி திடீர் சரண்டர் வீட்டுக்கு ஓடிய பாமக வேட்பாளர்கள்
புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல், பாமக உதாசீனப்படுத்தப்பட்டது. சீட்டு கொடுக்காத விரக்தியில் கூட்டணியை விட்டு வெளியேறி 19 இடங்களில் தனித்து பாமக போட்டியிடுகிறது. இதற்கிடையே திடீரென தேஜ கூட்டணிக்கு பாமக தலைமை ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘புதுச்சேரி சட்டசபைக்கு வரும் 9ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தேஜ கூட்டணிக்கு ஆதரவளிக்க பாமக முடிவு செய்திருக்கிறது. தேஜ கூட்டணியை வெற்றிப்பெற செய்வதற்கு தேர்தல் பணியாற்றும்படி, புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்தார்.
இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, லஜக வேட்பாளர்கள், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை சந்தித்து சால்வை அணிவித்து வருகின்றனர். தனித்து தேர்தல் பணியாற்றாமல், எங்களுடன் இணைந்து, தேஜ கூட்டணி வெற்றிக்கு பாடுபடுமாறு கேட்டுக்கொண்டனர். அதே நேரத்தில் பாமக வேட்பாளர்கள் என்னடா, இது தெரியாமல் தனித்து போட்டியிட்டு காட்டுகிறோமென வாய்ச்சவடால் விட்டுவிட்டோம். இப்போது எப்படி அவருக்கு திடீர் என ஓட்டு கேட்பது என சைலண்ட் மோடில் வீட்டுக்கு சென்றுவிட்டதாக அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
* மேற்குவங்கத்தை பிடிக்க பா.ஜவால் முடியாது: முதல்வர் மம்தா உறுதி
மேற்குவங்கத்தை பிடிக்க பா.ஜவால் ஒரு போதும் முடியாது என்று முதல்வர் மம்தா தெரிவித்தார். ராணிகஞ்சில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,’மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்ற பிறகு, அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்துக்கொண்டு டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற முயற்சி எடுப்பேன். மேற்குவங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால், அவர்கள் புல்டோசர்களைப் பயன்படுத்தி அனைவரையும் வெளியேற்றுவார்கள். மேற்குவங்கத்தை அழிக்க முயல்வதன் மூலம், பாஜ நாடு முழுவதும் தனது அதிகாரத்தை இழக்க நேரிடும்.
வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின் போது வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்காக, பாஜவின் ஏவலுக்கு இணங்கி தேர்தல் ஆணையம் செயல்பட்டது. ஒரு லட்சுமண ரேகை இருக்க வேண்டும்; ஆனால் பாஜ அனைத்து வரம்புகளையும் மீறிச் செயல்படுகிறது. இந்த சிறப்புத் திருத்தப் பணி உங்களுக்கு மரண மணியாக அமையும். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். ஆனால் அவர்கள் எனது அனைத்து அதிகாரங்களையும் பறித்துவிட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, மேற்குவங்க வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பான அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிப்பேன்’ என்றார்.
