திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் அடையாளம் காணும் வகையில் இருதரப்பு குழுவும் நேரில் சந்தித்து விவாதித்தனர். அண்ணா அறிவாலயத்தில் நடந்த சந்திப்பில் 28 தொகுதிகளில் 23 தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டன. மீதமுள்ள 5 தொகுதிகள் பேச்சுவார்த்தையில் இருந்தது. இந்நிலையில், இந்த தொகுதி பட்டியலுடன் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
இதை தொடர்ந்து மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் மீதமுள்ள 5 தொகுதிகளும் முடிவானது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பட்டியலை வெளியிட்டார். அதில், காங்கிரஸ் போட்டியிடக்கூடிய 28 தொகுதிகளும் வெளியானது. இந்த 28 தொகுதிகளில் 5 தொகுதிகளில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தென்காசி தொகுதிக்கு பதிலாக காங்கிரஸ் வாங்கியுள்ள சங்கரன்கோவில் தொகுதியில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளான பாக்கியராஜ், பாலுச்சாமி, ராஜலட்சுமி ஆகியோரிடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
அதேபோன்று, தென்காசி தொகுதி காங்கிரசுக்கு கிடைக்காததால் புதிதாக வாங்கியுள்ள அம்பாசமுத்திரம் தொகுதிக்கு நிர்வாகிகளிடையே கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த தொகுதியில் முன்னாள் எம்பி எஸ்.எஸ்.ராமசுப்பு, மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.காமராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியும், தற்போதைய மாவட்ட தலைவருமான வி.பி.துரை ஆகியோருக்கு இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. அதேபோன்று, துறையூர் தொகுதியில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கவுண்டம்பாளையம் தொகுதியில் தற்போதைய இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரியபிரகாஷ் மற்றும் அகில இந்திய செயலாளர் மயூரா ஜெயக்குமாருக்கு இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சரவணனுக்கும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திருப்பூர் கோபி ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த 5 தொகுதிகளில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆக்கிரமித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் வாய்ப்பு கேட்டு டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
* ஒரு நிமிஷம் பேசுறேன் அதுக்கு அப்புறமா போங்க…ப்ளீஸ்… அழாமல் கெஞ்சிய மாஜி
வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு அறிமுக கூட்டம் நேற்று சித்தூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மண்டபத்தில் நடந்தது. இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பெரும்பாலானோர் கலந்து கொள்ளவில்லை. அதிமுக சார்பில் மாஜி அமைச்சர் வீரமணி கலந்து கொண்டார். இவர் பேச்சை ஆரம்பிக்கும் முன்பே அவர் பேச்சை கேட்க விரும்பாததுபோல மண்டபத்தில் இருந்த கூட்டம் கலைய ஆரம்பித்து, சாப்பாடு பாக்ஸ்களை வாங்க சென்றனர். இதைப்பார்த்து கடுப்பான அவர், ‘ஓரிரு நிமிடங்கள் பேசிவிடுகிறேன். அதன் பிறகு செல்லுங்கள்’ என்று அழாத குறையாக கெஞ்சி கேட்டும் அதை யாரும் காதில் வாங்கவில்லை. ஆனாலும் விடாத வீரமணி, ‘எதிர்க்கட்சிகளுக்கு விலைபோகாதீர்கள்’ என்று கூறிவிட்டு உடனடியாக மேடையை விட்டு விறுவிறுவென இறங்கி நடையை கட்டினார்.
