×

ராமநாதபுரம் பாஜவுக்கு ஒதுக்கியதால் அதிமுக மாஜி அமைச்சர் விலகல்?

 

* கொம்பு சீவி கெடுத்த மதுரைக்காரர்
* கடுப்பில் தவெகவில் இணைய பேச்சு

ராமநாதபுரம்: அதிமுகவின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக, அவைத்தலைவராக இருந்தவர் முருகேசன். இவரது மகன் டாக்டர் மணிகண்டன், மதுரை மருத்துவக்கல்லூரி பேராசிரியராக இருந்தவர். மதுரை அண்ணா நகரில் கிளினிக் நடத்தியும் வந்தார். தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி சசிகலா மூலமாக 2016ல் அதிமுகவில் இணைந்தார். லக்கி பிரைசாக உடனடியாக இவருக்கு ராமநாதபுரம் தொகுதிக்கு சீட் கொடுக்கப்பட்டது. இது ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவினருக்கே பெரும் அதிர்ச்சி அளித்தது. அந்த தேர்தலில் வெற்றி பெற்றதோடு, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தார். அமைச்சராக இருந்த காலத்தில் கட்சியின் சீனியர்களை ஒருமையில் பேசுவது, தொண்டர்களை மதிக்காதது உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்தார்.

ஆனாலும், கட்சியில் செல்வாக்கோடு இருந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையிலும் நீடித்தார். அப்போது அரசு கேபிள் டிவி விவகாரத்தில் எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணனிடம் ஏற்பட்ட மோதலால் 2019ல் அமைச்சரவையில் இருந்து முதன்முதலாக நீக்கப்பட்டார். அவரின் பதவி உதயகுமாருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இதனால் அன்று முதல் மணிகண்டனுக்கும், உதயகுமாருக்கும் உரசல் ஏற்பட்டது. பிறகு 2021ல் இவர் மீது திரைப்பட நடிகை பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். கருவை கலைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர்.

இதன் பிறகு 2021 தேர்தலில் மணிகண்டனுக்கு சீட் மறுக்கப்பட்டது. இருந்தாலும் கட்சியில் மாநில மருத்துவர் அணியில் மாநில பொறுப்பில் இருந்ததால் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காட்டி வந்தார். இருந்தாலும் தனது சொந்த மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் உதயகுமார் (கமுதி) மற்றும் உதயகுமாரின் உறவினரும், மாவட்ட செயலாளராக உள்ள முனியசாமியை பொதுமேடையில் வைத்தே வசை பாடுவது என தொடர்ந்தார். இரு தரப்பிற்கும் மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலால் கோஷ்டிப்பூசல் தொடர்ந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரத்தில் பிரசார சுற்றுப்பயணம் வந்தபோது, ‘வரும் தேர்தலில் உனக்கு தான் ராமநாதபுரம் தொகுதி. கட்சி, தேர்தல் வேலையை பார்’ என கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் மகிழ்ச்சியடைந்த மணிகண்டன் தேர்தலை கருத்தில் கொண்டு 2 ஆண்டுகளாக களப்பணியாற்றி வந்தார். தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என பண்டிகை காலங்கள், உள்ளுர் திருவிழாக்களுக்கு கட்சியினர், பொதுமக்கள் என பணத்தை வாரி வழங்கினார். ஆனால் மணிகண்டனுக்கு சீட் வழங்கி விடக்கூடாது என்பதற்காக மாவட்ட பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் உதயகுமாரும், மாவட்ட செயலாளர் முனியசாமியும் இணைந்து, மண்டபம் ஒன்றிய செயலாளராக உள்ள மருதுபாண்டியை மணிகண்டனுக்கு எதிராக கொம்பு சீவி விட்டனர். அவரின் ஏற்பாட்டில் ராமநாதபுரத்தில் முக்குலத்தோரில் ஒரு பிரிவான அகமுடையார் முன்னேற்ற சங்கம் மாநாடு ஒன்றை நடத்தி, அதன் நிர்வாகிகளை எடப்பாடியை சந்திக்க வைத்தது உதயகுமார் தரப்பு.

இதில், ‘‘அகமுடையார் அதிகமாக வாழக்கூடிய ராமநாதபுரம் தொகுதியில் மறவர் சமுதாயத்தை சேர்ந்த மணிகண்டனுக்கு சீட் வழங்கக்கூடாது. வழங்கினால் ஓட்டு போட மாட்டோம்’’ என கூறியுள்ளனர். இந்த தகவலை அறிந்த பாஜ மாநில தலைவரான நயினார் நாகேந்திரனும், ‘‘2019 பாராளுமன்ற தேர்தலில் மணிகண்டன் ஒழுங்காக வேலை செய்யவில்லை; எனது தோல்விக்கு மணிகண்டனும் ஒரு காரணம்’’ என தன் பங்குக்கு பற்ற வைக்க, எடப்பாடி பழனிசாமி சீட் தர மறுத்து பாஜவிற்கு ராமநாதபுரத்தை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் எடப்பாடி மற்றும் என்டிஏ கூட்டணிக்கு எதிராக சமீபத்தில் தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.

இதையடுத்து, மதுரையில் இருந்த மணிகண்டன் அவசர, அவசரமாக சென்னை சென்றுள்ளார். அப்போது தனக்கு முதுகுளத்தூர் அல்லது திருவாடானை தொகுதி ஒதுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுக தலைமை, முதுகுளத்தூருக்கு மலேசியா பாண்டி, திருவாடானைக்கு கீர்த்திகா முனியசாமியை அறிவித்தது. இதனால் மீண்டும் அதிருப்தியடைந்த மணிகண்டன் தனக்கு மாவட்டச் செயலாளர் பதவியாவது தாருங்கள் என கேட்டுள்ளார். இப்போது போய் தேர்தல் வேலையை பாருங்கள், தேர்தலுக்கு பிறகு பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது ஆதரவாளர்களிடம் பேசிய மணிகண்டன் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என ஆலோசித்தார்.

அப்போது சிலர், ‘‘சசிகலாவை சந்தியுங்கள் அல்லது ஓபிஎஸ்சை சந்தித்து திமுகவிற்கு செல்லலாம் அல்லது தவெகவிற்கு போகலாம்’’ என கூறியுள்ளனர். அதன் பிறகு மணிகண்டன், நண்பர் ஒருவர் மூலமாக தவெகவிற்கு தூது அனுப்பியுள்ளார். ஏற்கனவே ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தேர்தலில் நிற்க ஆள் தேடிக்கொண்டிருந்த தவெகவிற்கு மணிகண்டனை விடக்கூடாது என நினைத்து நேரடியாக விஜய், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் மணிகண்டனிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மணிகண்டனிடம் தகவல் அறிய அவரது செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘நண்பர் ஒருவர் மூலம் தவெகவில் இருந்து விஜய், ஆதவ் அர்ஜூனா பேசினர். யோசித்து கூறுவதாக கூறியுள்ளேன். விரைவில் நல்ல முடிவு எடுப்பேன்’’ என்றார். ராமநாதபுரம் தொகுதி மற்றும் ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மணிகண்டனுக்கு செல்வாக்கு உள்ளது. சீட் ஒதுக்காத அதிருப்தியில் மாற்றுக்கட்சிக்கு சென்றால், அதிமுகவிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.

Tags : Adimuka Maji Minister ,Ramanathapuram ,Baja ,Maduraikar ,Kadudil Tawega Ramanathapuram ,Murukesan ,Adamugawa ,Dr. ,Manikandan ,Madurai Medical College ,Madurai ,Anna Nagar ,
× RELATED திமுக கூட்டணியில் மதிமுக...