×

ஜெயலலிதா தொகுதியில் அமமுகவுக்கு சீட்: மாஜி அமைச்சர்கள் கடும் அப்செட்

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். இங்கு இந்த முறை அதிமுக வேட்பாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பரஞ்சோதி ஆகியோர் சீட் கேட்டு விருப்ப மனு அளித்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் இருவரும் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மனோகரன் அமமுகவுக்கு சென்று விட்டு, கடந்த ஆண்டு தான் அதிமுகவில் சேர்ந்தார். மாற்று காட்சியில் இருந்து வந்த மனோகரனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. காலங்காலமாக கட்சியில் இருக்கும் வளர்மதி, பரஞ்சோதி புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

பணம் வைத்திருப்பவர்களை தேடிப்பார்த்து சீட் வழங்கப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல என்று பரஞ்சோதி, வளர்மதியின் ஆதரவாளர்கள் குமுறுகின்றனர். அதேபோல் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து அண்மையில் அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சி கிழக்கு தொகுதியை எதிர்பார்த்திருந்தார். சீட் கிடைக்காததால் இவரும் அதிருப்தியில் உள்ளார். முன்னாள் அமைச்சர் சிவபதி தொட்டியத்துக்கு குறி வைத்திருந்தார். இவரது எதிர்பார்ப்பும் நடக்கவில்லை. இதனால் 4 முன்னாள் அமைச்சர்களும் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதால் உள்ளடி வேலைக்கு பஞ்சம் இருக்காது. அதிருப்தியை சமாளிக்க தலைமை பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது.

* அமமுகவினரே எதிர்ப்பு
திருச்சியில் மேற்கு தொகுதியில், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், திருச்சி பெட்டவாய்த்தலையை சேர்ந்தவர். ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் தொட்டியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர் அதிமுகவில் சேர்ந்து, இப்போது அமமுகவில் உள்ளார். பெட்டவாய்த்தலை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. மேற்கு தொகுதிக்கு சம்மந்தமில்லாத ஒருவரை, வேட்பாளராக நிறுத்தி இருப்பது அமமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய முன்னாள் மேயர் சாருபாலா, செந்தில் நாதன் ஆகியோர் மேற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். சீட் கிடைக்காததால் இவர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுபற்றி திருச்சி அமமுகவினர் கூறுகையில், உள்ளூரில் நிர்வாகிகள் பலர் இருக்கும் போது, வெளியூர் வேட்பாளரை நிறுத்துவது ஏற்புடையதல்ல. எனவே வேட்பாளரை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் தோல்வி நிச்சயம் என்று வேதனையுடன் கூறினர்.

தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
எடப்பாடி பழனிசாமி
(அதிமுக பொதுச்செயலாளர்) நாகர்கோவில், ராதாபுரம்
செல்வப்பெருந்தகை
(காங்கிரஸ் மாநில தலைவர்) டெல்லி
வைகோ
(மதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
நயினார் நாகேந்திரன் (பாஜ தலைவர்) திருநெல்வேலி
பெ.சண்முகம்
(சி.பி.எம்.மாநில செயலாளர்) சென்னை
மு.வீரபாண்டியன்
(சி.பி.ஐ.மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன்
(வி.சி.க தலைவர்) சென்னை
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி
(பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன்
(தமாகா தலைவர்) சென்னை
சீமான்
(நாதக ஒருங்கிணைப்பாளர்) சென்னை
டி.டி.வி.தினகரன்
(அமமுக பொதுச்செயலாளர்) சென்னை
விஜய் (தவெக தலைவர்) சென்னை

Tags : AMMK ,Jayalalithaa ,Srirangam ,Trichy district ,Chief Minister ,whip ,Manoharan ,AIADMK ,Valarmathi ,Paranjothi… ,
× RELATED 18 தொகுதிகளில் திமுக- பாஜ நேரடி மோதல்: 5...