×

சொன்னாரு..! செஞ்சாரு..!! பட்டாசு தொழிலுக்கு நலவாரியம்

சொன்னாரு: திமுகவின் 2021ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் பட்டாசு தொழிலுக்கு தனி நலவாரியம், தொழிலாளர் பாதுகாப்பு, சீன பட்டாசுக்கு தடை போன்றவற்றை மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

செஞ்சாரு: தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக பட்டாசு தொழில் விளங்குகிறது. ஆபத்தான சூழலில் பணிபுரியும் இந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தை காக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முன்னோடியான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக, பட்டாசு ஆலை விபத்துகளில் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் செல்லாமல் தவிர்க்கும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டு அதன் மூலம், உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரையிலான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவித்து, இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.5 கோடி மதிப்பிலான தொகுப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உதவிகளை மாவட்ட அளவில் விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, விபத்து காலங்களில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாகவும், காயமடைந்த தொழிலாளர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதோடு, அவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை உடனடி நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும், சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காயப் பிரிவை நவீனப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வெறும் நிவாரணம் தருவதோடு நிற்காமல், விபத்துகளே நடக்காத சூழலை உருவாக்க முதல்வர் நேரடியாகக் களம் இறங்கும் விதமாக கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் விருதுநகர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாக சென்று பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்தார். ஒரு முதலமைச்சர் பட்டாசு ஆலைக்குள் சென்று தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டது இதுவே முதல்முறை எனக்கருதப்படுகிறது. இதுதவிர, விதிமீறல்களைக் கண்டறியவும், பாதுகாப்பு விதிகளை உறுதி செய்யவும் வட்டாட்சியர் தலைமையில் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிமாநிலங்களில் பட்டாசுக்கு விதிக்கப்படும் தடைகளால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க முதல்வர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி கோரி மற்ற மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதி, சந்தை வாய்ப்புகளை உறுதிப்படுத்தியுள்ளார். ஒன்றிய அரசிடம் இத்தொழிலுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் கொள்கை ரீதியான ஆதரவைப் பெறத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ‘‘மக்களிடம் செல், மக்களுக்காகப் பணியாற்று’’ என்ற அண்ணா மற்றும் கருணாநிதியின் வழியில், பட்டாசுத் தொழிலாளர்களின் கண்ணீரைத் துடைக்கும் ஒரு கவசமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். குழந்தைகளின் கல்வி மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான இந்தத் திட்டங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளன.

Tags : Centenario ,Dimukhin ,2021 election ,K. Stalin ,Centjaru ,Tamil Nadu ,Japan ,Sivakasi ,
× RELATED 18 தொகுதிகளில் திமுக- பாஜ நேரடி மோதல்: 5...