×

வரலாற்றிலேயே முதன்முறை: இலைக்கு ஒரு நடிகர்… தாமரைக்கு ஒரு நடிகர்… புதிய நீதி கட்சி; புதிய டிரெண்ட்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வேலூர், குடியாத்தம் அல்லது ஆரணி சட்டமன்ற தொகுதிகள் தங்களுக்கு அதிமுக கூட்டணியில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் புதிய நீதிக்கட்சியினர் இருந்து வந்தனர். அதற்கு ஏற்றபடி அவர்களுக்கான வாட்ஸ்அப் உட்பட சமூக வலைதள பக்கங்களும் சுறுசுறுப்புடன் இயங்கின. புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், அடிக்கடி வேலூர், ஆரணிக்கு வரத்தொடங்கினார். 2 மாதங்களுக்கு முன்பு நடந்த கிருபானந்தவாரியார் குருபூஜை விழாவிலும் கலந்து கொண்டு, சட்டமன்ற தேர்தலில் புதிய நீதிக்கட்சி கண்டிப்பாக போட்டியிடும் என்று தெரிவித்தார். இதனால், வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவாரா அல்லது அவரது உறவினர் போட்டியிடுவாரா என்று இருவேறு தகவல்கள் உலா வந்தன.

ஆனால் அதிமுகவில் வேலூர், குடியாத்தம் மட்டுமல்ல ஆரணியிலும் புதிய நீதிக்கட்சிக்கு சீட் ஒதுக்கக்கூடாது என்று எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. குறிப்பாக வேலூரில் அவருக்கு சீட் கொடுக்கவே கூடாது என்று வலுவான குரல் மாஜி மந்திரியிடம் இருந்தும், உள்ளூர் அதிமுகவில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கனவே 2 முறை பாஜவின் தாமரை, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர் ஏ.சி.சண்முகம் என்று எடப்பாடியிடம் வலுவான எதிர்ப்பை அதிமுகவினர் பதிவு செய்தனர்.

அதற்கேற்ப அதிமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் சீட் ஒதுக்கப்பட்டு தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன. இதனால் புதிய நீதிக்கட்சியினர் கடும் ஏமாற்றத்துக்கும், அதிருப்திக்கும் உள்ளாகினர். இத்தகைய சூழலில்தான், இந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஒரு கட்சி இரண்டு பிரதான கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடும் காட்சி அரங்கேறி உள்ளது. அதன்படி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் 2 நாட்களுக்கு முன்பு, எடப்பாடியை சந்தித்து பேசிய நிலையில், மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் பாஜவின் தாமரை சின்னத்திலும் போட்டியிடும் வகையில் புதிய நீதிக்கட்சிக்கு 2 இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதில் மதுரை மத்திய தொகுதியில் சினிமா இயக்குனர் சுந்தர்.சி போட்டியிடுவதாக ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். அவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். மற்றொரு தொகுதி எது என்பது இன்னும் முடிவாகவில்லை. தாமரை சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதால், பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட திருவண்ணாமலை புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்படும் என்றும், அதில் அடிக்கடி திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் பிரபல நடிகர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் புதியநீதி கட்சியினர் கூறுகின்றனர். ஏ.சி.சண்முகம் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் எங்களுக்கு ‘இலைக்கு ஒரு குத்து, தாமரைக்கு ஒரு குத்து’ என்ற கதைதான் என்று புலம்புகின்றனர் புதிய நீதிக்கட்சியினர்.

Tags : New Justice Party ,Tamil Nadu assembly ,Vellore ,Gudiyatham ,Arani ,Tiruvannamalai ,AIADMK ,WhatsApp… ,
× RELATED 18 தொகுதிகளில் திமுக- பாஜ நேரடி மோதல்: 5...