×

25 ஆண்டுக்கு பின் தென்காசியில் திமுக-அதிமுக நேரடி மோதல்

தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக உருவாவதற்கு முன்பாக பழைய சென்னை மாகாணமாக இயங்கி வந்த போதே தென்காசி சட்டமன்ற தொகுதியாக உள்ளது. 1952ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்தது. இடையில் 1980ல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட கே.சட்டநாத கரையாளர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001க்குப் பிறகு திராவிட கட்சிகளின் ஆதிக்கம் துவங்கியது. 2001ல் அதிமுக முதல் முறையாக வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அந்த தேர்தலில் திமுகவும் அதிமுகவும் முதன்முறையாக நேரடியாக களத்தில் மோதியது.

அண்ணாமலையை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கருப்பசாமி பாண்டியன் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதனைத்தொடர்ந்து 2006ல் தென்காசி தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்ட கருப்பசாமி பாண்டியன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி கட்சியான மதிமுக சார்பில் போட்டியிட்ட இராம.உதயசூரியனை எதிர்த்து வெற்றி பெற்றார். 2006க்குப்பிறகு தற்போது தான் அதாவது 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் உதயசூரியன் சின்னம் தென்காசி தொகுதியில் களம் காணுகின்றது.

அதேவேளை 2001க்குப் பிறகு அதாவது 25 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது தான் தென்காசி தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இரண்டும் நேரடியாக மோதுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சங்கரன்கோவில் தொகுதி ஒதுக்கப்பட்டதால் இம்முறை மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் தென்காசியில் திமுக நேரடியாக களத்தில் இறங்குவது குறிப்பிடத்தக்கது. திமுக சார்பில் டாக்டர் கலை கதிரவனும் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிடுகின்றனர்.

* கிருஷ்ணசாமிக்கு எடப்பாடி நம்பிக்கை துரோகமா?
கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘தவெக இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்பட எந்த கட்சிக்கும் நாங்கள் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. கூட்டணியில் உடன்பாடு ஏற்படும். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படாமலும் இருக்கும். இதில் நம்பிக்கை துரோகம் என்பதற்கே இடமில்லை. அதிமுகவில் எந்தவொரு அதிருப்தியும் இல்லை. எந்த நிர்வாகியும் அதிருப்தி கருத்தை வெளியிடவில்லை. இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி. நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். எடப்பாடி அறிவித்த வேட்பாளர் பட்டியலை நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர். அனைவரும் நிறைவாக இருக்கின்றனர் என்பது தான் நிதர்சனம்’ என்றார்.

* மக்களை மறந்த எடப்பாடிக்கு எம்எல்ஏக்கள், அரசியல் எதற்கு? ப.சிதம்பரம் எம்பி கேள்வி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை தெற்கு மற்றும் கிழக்கு வட்டார பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் ப.சிதம்பரம் எம்.பி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘எடப்பாடி பழனிசாமி காஸ் விலை உயர்வை பற்றி பேசவில்லை. அமெரிக்க, இஸ்ரேல் – ஈரான் போர் நடப்பதை பற்றி பேசவில்லை. ஒன்றிய அரசோடு சேர்ந்துகொண்டு மக்களை மறந்து விட்டார். இவர்கள் கட்சியில் எம்பிக்கள் எதற்கு? எம்எல்ஏக்கள் எதற்கு? எடப்பாடி எதற்காக அரசியல் பண்ணவேண்டும்’’ என்றார்.

Tags : DMK ,AIADMK ,Tenkasi ,Madras Presidency ,Tamil Nadu ,Congress party ,
× RELATED 18 தொகுதிகளில் திமுக- பாஜ நேரடி மோதல்: 5...