காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வெற்றிச்செல்வியை ஆதரித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் சீமான், நிருபர்களிடம் அளித்த பேட்டியில்,‘‘அமைதிப்படை படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது குறித்து கேட்டபோது, இதெல்லாம் ஒரு கேள்வியா?, அமைதிப்படை படம் ஒரு அரசியல் படம், அதை வாங்கியவர்கள் வெளியிட வேண்டும் என நினைக்கிறார்கள்,
இது தொடர்பான விவாதங்கள் இயல்பானவை. விஜய் பிரசாரம் தொடர்பான அனுமதி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் யாருக்கும் அனுமதி மறுக்க வேண்டிய அவசியம் இல்லை, எல்லாருக்கும் சமமாக அனுமதி வழங்க வேண்டும். தம்பி விஜய் இப்போதுதான் சிக்கல்களையும், நெருக்கடியையும் அனுபவிக்கிறார். ஆனால், நான் கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற நெருக்கடிகளை அனுபவித்து வருகிறேன். தமிழக மக்களுக்கு கொடுப்பது இலவச திட்டமல்ல அது நட்டம், மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுத்தவர்கள், கொடுக்க நினைப்பவர்கள் இலவசங்களை தர மாட்டார்கள். இலவசங்களை ஒழிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, பூந்தமல்லி தனி சட்டமன்ற தொகுதியில் நாதக வேட்பாளர் மேகலா என்பவரை ஆதரித்து குமணன்சாவடி பேருந்து நிறுத்தத்தில் சீமான் பேசியதாவது: எந்த பின்புலமும் இல்லாத, எந்த பொருளாதார பின்புலமும் இல்லாத எளிய சாதாரண மக்கள் அசாதாரண கனவுகளை சுமந்து கொண்டு வந்துள்ளோம். தமிழின் சிறப்பு, பண்பாடு, கலாச்சாரம், வேளாண்மை, தனித்துவம் உள்ளிட்டவற்றை காப்பாற்றவும் பாதுகாக்கவும், பசி பஞ்சமற்ற, கொலை, கொள்ளையற்ற, ஊழலற்ற, பாலியல் வன்கொடுமையற்ற அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று மக்களை தேடி தேடி ஓடி வந்து கொண்டிருக்கிறோம். தேர்தலில் பல ஆண்டுகளாக தனித்து நிற்கிறோம், தனித்துவத்தோடு நிற்கிறோம். எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள். எங்களின் இந்த கனவு, வரும் தலைமுறைக்கானது. இவ்வாறு அவர் பேசினார்.
* தாமரையில் போட்டி ஜான்பாண்டியன் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் தேர்வு ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கட்சியின் தென் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘வேட்பாளர் தேர்வு குறித்து 250 நிர்வாகிகள் முன்னிலையில் ஆலோசனை நடந்தது. 29ம் தேதி (இன்று) காலை அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பெயர் வெளியிடப்படும். தாமரை சின்னத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். கூட்டணி கட்சிகளில் அதிருப்தி இருப்பது இயல்பானது. ஆனால் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். அதற்கு மாறாக செயல்படுபவர்கள் கட்சிக்கு விரோதமாக கருதப்படுவார்கள்’’ என்றார்.
