குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூர் நகர தவெக செயலாளர் விவேக். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்ஸ் பார்க் பகுதியிலிருந்து குன்னூரை நோக்கி தனது காரில் வந்து கொண்டிருந்தார். பெட் போர்ட் பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற ஒரு காரின் மீது விவேக் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்த காரில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் பயணம் செய்துள்ளார். விபத்து குறித்து கேள்வி எழுப்பிய அந்த வெளிநாட்டு நபரிடம், மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக விவேக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
காரில் கட்டப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியைக் காட்டிய விவேக், ‘‘நான் தான் இந்த ஊர் தவெக செயலாளர், என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது’’ என்று அதிகாரத் தோரணையில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. கட்சியின் பெயரையும், தலைவர் விஜய்யின் செல்வாக்கையும் பயன்படுத்தி ஒரு வெளிநாட்டு பயணியையே மிரட்டியது அங்கிருந்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவேக் மிரட்டிய அந்த நபர் சாதாரணமானவர் அல்ல என்பது பின்னரே தெரியவந்தது. பாதிக்கப்பட்ட அந்த ஆஸ்திரேலிய நபர், தவெக தலைவர் விஜய்க்கு மிக நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த உடனேயே, அவர் தனது அலைபேசி வாயிலாக விஜய்யை தொடர்பு கொண்டு, ‘‘உங்கள் கட்சி நிர்வாகி ஒருவர் விபத்து ஏற்படுத்தியது மட்டுமன்றி, உங்கள் பெயரைச் சொல்லி என்னை மிரட்டுகிறார்’’ என்று ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விஜய், உடனடியாக கட்சி முக்கிய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு, குன்னூர் நகரச் செயலாளர் பதவியிலிருந்து விவேக்கை நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆட்சி அதிகாரத்திற்கே வராத நிலையில், ஒரு சிறிய பதவி கிடைத்ததற்கே வெளிநாட்டவர் என்றும் பாராமல் மிரட்டல் விடுத்திருப்பது, அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு பொதுமக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படை பண்பு இல்லை என்பதைக் காட்டியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தவெக போன்ற புதிய கட்சிகளில் நிர்வாகிகள் ஆரம்பத்திலேயே சட்டத்தை கையில் எடுப்பது தமிழகத்தின் அமைதிக்கு உகந்ததல்ல. குன்னூர் பகுதியில் தவெக நிர்வாகியின் இந்தச்செயல், அந்தக் கட்சியினர் மீது பொதுமக்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் சிதைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
