- மாஜி எம்எல்ஏ பாஸ்கர்
- நாமக்கல்லி
- தரங்கமணி
- வீட்டில்
- தேவி மோகன்
- நாமக்கல்
- சட்டமன்ற உறுப்பினர்
- பாஸ்கர்
- பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- முன்னாள் அமைச்சர்
- Thangamani
பள்ளிபாளையம்: அதிமுக வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதில் நாமக்கல் தொகுதிக்கு வேட்பாளராக தேவி மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் தங்கமணி மிரட்டி, பாஸ்கரை வேட்பாளராக அறிவிக்கவிடாமல் செய்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் நேற்று முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தனது ஆதரவாளர்கள் சுமார் 100 பேருடன் பள்ளிபாளையம் வந்தார். இங்குள்ள கோவிந்தம்பாளையத்தில் இருக்கும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டிற்கு சென்றார்.
அங்கு தங்கமணி எம்எல்ஏ இல்லை. அவர் சென்னையிலிருந்து வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இதனால் ஏமாற்றமடைந்த பாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் தங்கமணி வீட்டின் முன்பு திரண்டு அவரை கண்டித்து கோஷம் எழுப்பினார். மாவட்ட செயலாளர் தங்கமணி சர்வாதிகாரமாக செயல்படுவதாகவும், அதிமுக கட்சியை அழிப்பதாகவும் அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: வேட்பாளர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இங்கு வந்தோம். மாவட்ட செயலாளர் தங்கமணி இல்லை. எனக்கு பிறகுதான் அவர் கட்சிக்கு வந்தார். அவரை விட கட்சியில் நான் சீனியர்.
நான் இவருக்கு முன்பு 4 மாவட்ட செயலாளர்களை பார்த்துவிட்டேன். மாவட்ட செயலாளர் கட்சிக்கு துரோகமிழைத்து வருகிறார். நாமக்கல் தலைநகரில் நடத்த வேண்டிய போராட்டத்தை அவர் நடத்தவில்லை. 2 வருடமாகவே நாமக்கல்லில் எந்த போராட்டத்தையும் அவர் நடத்துவதில்லை. தமிழ்நாடு முழுவதும் அதிமுகவில் மாவட்டங்களை இரண்டாக பிரித்தபோதும் நாமக்கல் மாவட்டத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டுமென கேட்டதில் என்ன தவறு இருக்கிறது. நாமக்கல்லில் நடத்தப்படும் கட்சி கூட்டங்களுக்கு எங்களுக்கு அழைப்பு இல்லை. நாங்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்வதில்லை. அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென கோயில்களில் பிரார்த்தனை செய்தோம்.
கிடா வெட்டி வேண்டுதல் நிறைவேற்றினோம். இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டுமென நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தும் மாவட்ட செயலாளர் புறக்கணித்து விட்டார். இதற்கெல்லாம் அவர் பதில் சொல்லியாக வேண்டும். மாவட்ட அலுவலகத்திற்கு வரட்டும், அங்கு பேசிக்கொள்கிறோம். இவ்வாறு முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் கூறினார். அதிமுக வேட்பாளர் அறிவிப்பில், கட்சியினரின் உணர்வை மதிக்காமல் நடந்து கொண்டதாக கூறி முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் போர்க்கொடி தூக்கியுள்ளது மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபியில் எடப்பாடி உறவினரின் நண்பரை வேட்பாளராக ஏற்க மறுப்பு: மாற்றாவிட்டால் கட்சி தாவ அதிமுகவினர் முடிவு
கோபி தொகுதி தமிழக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விஐபி தொகுதியாக உள்ளது. அதிமுகவின் முகமாக அறியப்பட்ட கே.ஏ.செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தவெகவில் இணைந்தார். இதுவரை கோபி தொகுதி என்றாலே செங்கோட்டையன் தான் என்று இருந்த நிலை தற்போது மாறி உள்ளதால், கட்சியில் உள்ள சீனியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று மூத்த நிர்வாகிகள் பலர் விருப்ப மனு அளித்து நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் கட்சியில் இணைந்து சில ஆண்டுகளே ஆன, தொண்டர்களுக்கும், வாக்காளர்களுக்கும் சிறிதும் அறிமுகமில்லாத வி.பி.பிரபு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த, நிர்வாகிகள் பலர் கடும் அதிருப்தியில் உள்ளனர். நம்பியூரில் சில நிர்வாகிகள் நேற்றுமுன்தினம் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அதைத்தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்த மற்ற நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளனர். அதிமுக வேட்பாளரை மாற்றாவிட்டால் அனைவரும் தவெகவில் இணைய முடிவெடுத்து உள்ளனர்.
இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘‘செங்கோட்டையனை எதிர்த்து களம் காண மிகச்சரியான வேட்பாளரை நிறுத்த வேண்டிய நிலையில் யாருக்கும் தெரியாத ஒருவரை, அதுவும் எடப்பாடி பழனிசாமி உறவினரின் நண்பர் என்ற ஒரே தகுதி உள்ளதால் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இதை மாற்றாவிட்டால் கூண்டோடு கட்சியை விட்டு விலகி தவெகவில் இணைய முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.
