×

மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மக்களவை தொகுதிகள் 816 ஆகிறது: நடப்பு கூட்டத்தொடரில் 2 மசோதாக்கள் தாக்கல்?

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை விரைந்து அமல்படுத்தும் வகையில், 2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த 2 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதா கடந்த 2023ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம், 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 மாநில தேர்தல் நடக்க உள்ள நிலையில், மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை விரைவாக அமலுக்கு கொண்டு வர ஒன்றிய அரசு விரும்புகிறது. இதற்காக அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வரையிலும் காத்திருக்காமல், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய தீர்மானித்துள்ளது.

இதற்காக அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட திருத்தம் உட்பட 2 மசோதாக்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் 2 மசோதாக்களையும் நிறைவேற்ற காய் நகர்த்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவையில் பாஜ கூட்டணிக்கு போதிய பலமில்லை.

இதனால் என்டிஏ கூட்டணியில் அல்லாத மாநில கட்சிகள் மற்றும் நட்பு கட்சிகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி ஆதரவை திரட்டி உள்ளார். ஒன்றிய அரசின் இந்த திட்டமிட்டப்படி தொகுதி மறுவரையறை செய்தால் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 816 ஆக உயரும். உயர்த்தப்பட்ட 816 தொகுதிகளில் பெண்களுக்கு 273 தொகுதிகள் ஒதுக்கீடு செயயப்படும்.

திருத்திய தொகுதி மறுவரையறையின்படி பாஜ ஆளும் உத்திரப் பிரதேசத்தின் நாடாளுமன்ற பலம் 80 லிருந்து 120 ஆக உயர வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் மக்களவை எம்பிக்களின் பலம் 48லிருந்து 72 ஆகவும் பீகாரில் 40 லிருந்து 60 ஆகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் 39 லிருந்து 59 ஆக உயர வாய்ப்பு.

* தென் மாநிலங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்
2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடந்தால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படும். வட இந்தியாவில் தொகுதிகள் கணிசமாக உயரும் அதே நேரத்தில் தென் மாநிலங்களில் பெயரளவுக்கே தொகுதிகள் எண்ணிக்கை மாறும்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிப்பதாக மறுவரையறை அமையும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநில முதல்வர்கள், தலைவர்களை அழைத்து ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி இருக்கிறார். 1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் வலியுறுத்துகின்றன.

Tags : Lok Sabha ,New Delhi ,Union government ,Parliament ,Lok Sabha seats ,
× RELATED தலைமைச் செயலாளர், டிஜிபி உட்பட 79...