×

எஸ்ஐஆர் பட்டியலில் நிறுத்திவைக்கப்பட்ட 60 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட முடியுமா? முடியாதா? தேர்தல் கமிஷன் வெளியிட்ட புது அறிவிப்பால் குழப்பம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேலும் 60 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதுபற்றிய வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் வெளிமாநில நீதிபதிகள் அடங்கிய குழு தலைமையில் விசாரணை நடந்தது.

இந்த பட்டியல் வழங்கப்பட்டும் இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. அதேவேளையில், முதல் துணை வாக்காளர் பட்டியலை அது வெளியிட்டுள்ளது. வாக்குச்சாவடி வாரியான முதல் துணை வாக்காளர் பட்டியல், நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது.

இதுகுறித்து மேற்குவங்க தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் கூறுகையில்,’மேற்குவங்க எஸ்ஐஆர் பட்டியலுக்கு பிறகு உள்ள புள்ளிவிவரங்கள் குறித்து என்னால்கூடத் தெளிவான தகவல்களை வழங்க இயலாது. தற்போதைக்கு என்னிடம் எந்தப் புள்ளிவிவரங்களும் இல்லை; எத்தனை பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதையும் என்னால் கூற இயலாது. அந்தச் செயல்முறை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட 60 லட்சம் பேரில் சுமார் 29 லட்சம் பெயர்கள் தொடர்பான விசாரணை முடிந்து தீர்வு காணப்பட்டுள்ளது. முதல் துணைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

விசாரணை மற்றும் தீர்வு காணும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேலும் பல துணைப் பட்டியல்கள் வெளியிடப்படும். வாக்குச்சாவடி வாரியான பட்டியல்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தங்கள் வாக்காளர் நிலை குறித்த விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

* மேற்குவங்க தேர்தல் அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு ஆணையம் ஒப்புதல்
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலுக்காக, தேர்தல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து பணியமர்த்துவதற்குத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியும் அடங்கும். மாற்றப்பட்ட அதிகாரிகள் நேற்று மாலை 5 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்தந்தத் தொகுதிகளில் பணியில் சேர உத்தரவிடப்பட்டது. மேலும் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள பயிற்சி முகாமில் அந்த அதிகாரிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* 3 மாநிலங்களில் 2511 வேட்பாளர்கள் மனு
அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளில் 817 வேட்பாளர்கள் சார்பில் 1,388 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதியில் 1252 வேட்பாளர்கள் சார்பில் 2117 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதியில் 442 வேட்பாளர்கள் சார்பில் 514 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 3 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் உள்ள 296 தொகுதிகளில் 2511 வேட்பாளர்கள் சார்பில் 4019 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Tags : Election Commission ,Kolkata ,West Bengal ,
× RELATED தலைமைச் செயலாளர், டிஜிபி உட்பட 79...