புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா கூட்டணியில் காங்கிரசுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 14 தொகுதிகள் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் விசிகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் திமுக 13 தொகுதிகளில் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, வில்லியனூரில் மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ., மங்கலத்தில் எஸ்.எஸ்.ரங்கன், திருபுவனையில் அங்காளன், பாகூரில் செந்தில்குமார் எம்எல்ஏ., முதலியார்பேட்டையில் சம்பத் எம்எல்ஏ., உப்பளத்தில் அனிபால் கென்னடி எம்எல்ஏ., உருளையன்பேட்டையில் கோபால், நெல்லித்தோப்பில் கார்த்திகேயன்,
ராஜ்பவனில் விக்னேஷ் கண்ணன், காலாப்பட்டில் செந்தில் (எ) ரமேஷ், கதிர்காமத்தில் வடிவேலு, காரைக்கால் தெற்கில் நாஜிம் எம்எல்ஏ., நிரவி டிஆர்.பட்டினத்தில் நாகதியாகராஜன் எம்எல்ஏ., ஆகியோர் போட்டியிடுகின்றனர். 14வதாக உழவர்கரை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக தலைமை ஒப்புதலுடன், திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா நேற்று வெளியிட்டுள்ளார்.
* விசிக 3 தொகுதிகளில் தனித்துப்போட்டி
திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒரு தொகுதி நிலையில், உழவர்கரை, ஊசுடு, நெட்டப்பாக்கம் ஆகிய 3 தொகுதிகளில் விசிக தனித்துப் போட்டியிடும். மற்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி அறிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து விசிகவுடன் புதுவை திமுக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தற்போது தமிழகத்தில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு தொகுதி பங்கீடு முடிந்து உள்ளதால் இங்கும் பிரச்னை முடிந்து விடும் என திமுக தரப்பில் கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியில் உழவர்கரை தொகுதி விசிகவுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
