×

ரூ.200 கோடி சொத்தை மறைத்ததாக காங். புகார்: நேமம் தொகுதி பாஜ வேட்பாளருக்கு சிக்கல்

திருவனந்தபுரம் நேமம் தொகுதியில் பாஜ சார்பில் அக்கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் ஒன்றிய இணையமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ராஜீவ் சந்திரசேகர் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனால், வேட்பு மனுவில் இவர் பெங்களூருவில் உள்ள தன்னுடைய ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்து விவரங்களை குறிப்பிடவில்லை என்று காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தது.

உண்மையான விவரங்களை தாக்கல் செய்யாததால் இவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று நேமம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சபரிநாதன் தேர்தல் ஆணையத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று கேரளாவில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது காங்கிரசின் புகாரைத் தொடர்ந்து ராஜீவ் சந்திரசேகரின் வேட்பு மனுவை பரிசீலிப்பது தள்ளி வைக்கப்பட்டது.

மற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்ட பின்னர் கடைசியாகவே இவரது மனு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. நீண்ட பல கட்ட ஆலோசனைகளுக்குப் பின்னரே ராஜீவ் சந்திரசேகரின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தை இதோடு விட்டுவிடப் போவதில்லை என்றும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு இது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக இந்தத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சபரிநாதன் கூறினார்.

இதுகுறித்து ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், என் மீது கூறப்பட்ட புகாரில் எந்த உண்மையும் கிடையாது. காங்கிரஸ் எந்த நீதிமன்றத்திற்கு வேண்டுமானாலும் செல்லட்டும். எல்லா தேர்தலுக்கு முன்பும் தனிப்பட்ட முறையில் தாக்குவது காங்கிரசின் வழக்கமாகும் என்றார். ராஜீவ் சந்திரசேகர் தனக்கு ரூ. 93.88 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : Congress ,BJP ,Nemam constituency ,president ,Union Minister ,Rajeev Chandrasekhar ,Nemam ,Thiruvananthapuram ,
× RELATED தலைமைச் செயலாளர், டிஜிபி உட்பட 79...