×

திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தேர்தலில் மநீம போட்டியிடவில்லை: கமல்ஹாசன் அறிக்கை

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடவில்லை, திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்கிற முடிவை திறந்த மனதுடன், தெளிந்த உள்ளத்துடனும் அறிவிக்கிறோம் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேச நன்மைக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒலித்தது. அன்று முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர், திமுக பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களும் அன்போடும் மரியாதையோடும் நட்புணர்வோடும் நடந்து கொண்டார்கள் என்பதை பதிவு செய்யத்தான் வேண்டும். நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை. பேட்டரி டார்ச் சின்னத்துடனான மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் பிணைப்பு உணர்வுப்பூர்வமானது.

தமிழ் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழலில், எங்கே எங்கள் பங்கு என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல, கடமை, சுய நலம் அல்ல, பொறுமை.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, திராவிட மாடல் 2.0 அரசு அமைவது இன்றைய தேவை. இது வெறும் ஆட்சி மட்டுமல்ல, காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நீதிபரிபாலனம். ஆகவே 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடவில்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியி வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்கிற முடிவை திறந்த மனதுடன், தெளிந் உள்ளத்துடனும் அறிவிக்கிறோம். மிக விரைவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அவரை மகிழ்ச்சியோடு நாம் சந்தித்து வாழ்த்துவோம் எனும் நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது.

* கமலின் முடிவை வரலாறு பாராட்டும்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் மநீம தலைவருமான கமலஹாசன் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார். இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். ‘‘இது தியாகம் அல்ல, கடமை’’ என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான்.

அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் திராவிடமாடல் 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்.பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : DMK ,Maneema ,Kamal Haasan ,Chennai ,Makkal Needhi Maiam ,
× RELATED அதிமுக – பாஜக கூட்டணியில்...