சென்னை: ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் பாஜ தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜவில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் ஏற்பட்ட இழுபறியால் டெல்லி செல்லும் தனது பயணத்தை திடீர் ரத்து செய்துள்ளார். தமிழக பாஜ மேலிடப் பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பியூஸ் கோயல் நேற்று முன்தினம் காலை சென்னை வந்தார். சென்னை வந்த அவர் பாஜ நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பாஜ, பாமக, அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த முதற்கட்ட அறிவிப்பு வெளியானது. இருப்பினும், தமாகா, தமமுக, ஐஜேகே உள்ளிட்ட மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை உறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது.
இந்நிலையில், நேற்று காலை எஞ்சியுள்ள கட்சிகளுக்கான இடங்களை இறுதி செய்வது குறித்து பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோருடன் பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தினார். பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பாக கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், பியூஸ் கோயலால் நேற்று டெல்லி செல்ல முடியவில்லை. இதை தொடர்ந்து தனது பயணத்தை திடீர் ரத்து செய்து விட்டு சென்னையில் தங்கியுள்ளார். முன்னாள் பாஜ தலைவர் அண்ணாமலையும் பியூஸ் கோயலைச் சந்தித்து, கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை தனக்கு ஒதுக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
