×

‘மாப்ள அவர்தான் ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது’ அமித்ஷா எழுதி கொடுத்ததை படித்துவிட்டு கூட்டணியை உறுதி செய்ததாக வெற்று பெருமை: எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் ஐ.பெரியசாமி கடும் தாக்கு

சென்னை: அமித்ஷா எழுதி கொடுத்ததை படித்துவிட்டு, கூட்டணியை உறுதி செய்து விட்டோம் என எடப்பாடி பழனிசாமி வெற்று பெருமை பேசுவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீட்டு இடங்களை அதிமுக அலுவலகத்தில் அறிவித்ததற்காக எதையோ சாதித்து விட்டது போல பெருமைப்பட்டு கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி முடிவான பிறகு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக அமித்ஷாவை சந்திக்க டெல்லிக்கு 4 முறை சென்றார் எடப்பாடி.

அனைத்தையும் பேசி முடித்தது அமித்ஷா. தொகுதிப் பங்கீட்டு எண்ணிக்கையை மட்டும் சொல்லும் வெறும் ’அறிவிப்பாளர்’ பதவியை மட்டும் பெற்றதில் பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? மாப்ள அவர்தான். ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது என்ற காமெடியை போல அமித்ஷா எழுதிக் கொடுத்த கணக்கை அதிமுக அலுவலகத்தில் வாசித்திருக்கிறார் பாஜ அடிமை பழனிசாமி. இதில், கூட்டணியை உறுதி செய்து விட்டோம் என்ற வெற்று பெருமை வேறு. ஏதோ பெரிதாக சாதித்ததைப் போலச் சிரிப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

கடுமையான விமர்சனத்திற்கு பிறகே அதிமுக அலுவலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது வெறும் கண்துடைப்புதான். மதுராந்தகம், மதுரை மற்றும் திருச்சி கூட்டங்களில் பிரதமர் மோடி பழனிசாமியின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை. பிரதான முகப்பில் எடப்பாடியின் படம் புறக்கணிக்கப்பட்டது. தந்தை பெரியாரின் படத்தை நீக்கினார்கள். கூட்டணி என்ற பெயரில் எடப்பாடி வலுக்கட்டாயமாக வரவைக்கப்பட்டுப் பணிய வைக்கப்பட்டார்.
இந்த அவமானம் எல்லாம் ஏற்பட்ட பிறகு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் மட்டுமாவது நான் செய்கிறேன் என பழனிசாமி காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டு வாங்கியிருப்பார் என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது.

புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, தமாகா கட்சிகள் பியூஷ் கோயலை ஓட்டலில் சந்தித்துத்தான் தொகுதிகள் தொடர்பாக கோரிக்கை வைத்தார்கள். அதிமுகதான் தொகுதிகளைப் பிரித்து வழங்குகிறது என்றால், ஏன் பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைக்க வேண்டும். 2021 தேர்தலில் 3.80 சதவிகிதம் ஓட்டு வாங்கிய பாமகவுக்கு 18 தொகுதிகள் 2.35 சதவிகிதம் ஓட்டு வாங்கிய அமமுகவுக்கு 11 தொகுதிகள். ஆனால், 2.62 சதவீதம் ஓட்டு வாங்கிய பாஜவுக்கு 27 தொகுதிகள் என்பதைப் பார்த்தாலே அமித்ஷா மிரட்டியே சீட் ஒதுக்க வைத்திருக்கிறார் என்பது அம்பலமாகியுள்ளது.

ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான்பாண்டியன், ஜெகன்மூர்த்தி ஆகியோரின் கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் எத்தனை என்று அறிவிக்கவில்லை. அவர்களும் தாமரை சின்னத்தில் களம் கண்டால் பாஜ போட்டியிடும் எண்ணிக்கை 35ஐ எட்டலாம். இவ்வளவு பிரச் னையை வைத்துக்கொண்டு திமுக கூட்டணி பற்றிப் பேச பழனிசாமிக்கு தகுதி இருக்கிறதா. தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்ற இந்த தேர்தல் போரில் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு திமுக தலைமையிலான தமிழ்நாடு அணி வெல்லும். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Edappadi Palaniswami ,Minister ,I. Periyasamy ,Amit Shah ,Chennai ,National Democratic Alliance… ,
× RELATED அதிமுக – பாஜக கூட்டணியில்...