- பாஜக
- காரைக்கால்
- புதுச்சேரி சட்டசபை
- காரைக்கால் மாவட்டம்
- நெடுங்காடு-கொட்டுச்சேரி
- திருநள்ளாறு
- காரைக்கால் வடக்கு
- காரைக்கல் தெற்கு
- திருப்பட்டினம்-நிரவி
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 9ம்தேதி நடைபெறுகிறது. இதில் காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு-கோட்டுச்சேரி, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, திருப்பட்டினம்-நிரவி ஆகிய 5 தொகுதிகளில் நேற்றுமுன்தினம் வேட்பு மனு தாக்கல் முடிந்தது. இதில் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியில் பாஜ சார்பில் மருத்துவர் விக்னேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என கட்சியினர் எதிர்பார்த்த நிலையில், கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திரபிரியங்கா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதில் விரக்தி அடைந்த மருத்துவர் விக்னேஷ்வரன் நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவெடுத்தார்.
இதையடுத்து நேற்றுமுன்தினம் பூவம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் விக்னேஸ்வரன் ஆதரவாளர்கள் திரண்டனர். அப்போது விக்னேஸ்வரன், எனது டெபாசிட் பணம் உங்களது பணமாக இருக்க வேண்டும் எனக்கூறி ஒவ்வொருவரும் பத்து ரூபாய் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனைத்தொடர்ந்து, அங்கு இருந்த பொதுமக்களும், அவரது ஆதரவாளர்களும் போட்டி போட்டு அவர் விரித்து வைத்திருந்த துண்டில் பணத்தை போட்டனர். பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட ஐந்தாயிரம் ரூபாயை மாரியம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்து பின்னர் காரைக்கால் காமராஜர் வளாகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் விக்னேஸ்வரன் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜ கை விரித்ததால் மருத்துவர் விக்னேஷ் வாக்காளர்களான பொதுமக்களிடமே வேட்புமனு தாக்கலுக்கான டெபாசிட் தொகையை துண்டேந்தி வசூலித்து கட்டியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
* பாஜவுக்கு சென்றவர்கள் பதவி, சீட்டுக்கு பிச்சை எடுக்குறாங்க… காங்கிரஸ் எம்எல்ஏ ‘கலாய்’
விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தேர்தல் அறிக்கை கருத்து கேட்புக்கூட்டத்தில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘காங்கிரஸ் கட்சியில் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் தற்போது 5 கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வார் ரூம் என்று புதுசு, புதுசா ஏற்படுத்தி தேர்தல் பணியை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. இதனை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். தமிழகத்தில் எப்படியாவது பாஜ காலூன்ற முயற்சித்து வருகிறது. அதற்காகத்தான் அதிமுகவுடன் முரண்டு பிடித்த அண்ணாமலையை மாற்றி அமித்ஷா, நயினார் நாகேந்திரனை நியமித்து கூட்டணி உடன்படிக்கை ஏற்படுத்தியிருக்கிறார்.
நமக்கு எதிரி பாஜதான். ஆனால் தமிழகத்தில் திமுக 5 ஆண்டுகாலம் பாஜவை எதிர்த்து வந்திருக்கிறது பாராட்டத்தக்கது. காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து பாஜவுக்கு சென்றவர்கள் அங்கு பதவிக்கும், சீட்டுக்கும் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார்கள். திமுக கூட்டணியில் நமக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேட்பாளர்களை கட்சி தலைமை அறிவிக்கும். பாதித்த விஷயங்களை பேசாமல் தேர்தல் பணியாற்ற வேண்டும். நாம் போட்டியிடும் தொகுதிகள் மட்டுமல்லாமல் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற தேர்தல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* ரூ.2 லட்சம் வரை அனுமதிக்கணும்: இல்லன்னா… கடையடைப்பு; விக்கிரமராஜா எச்சரிக்கை
ஊட்டியில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று அளித்த பேட்டி: தேர்தல் நேரத்தில்ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் எடுத்துச் செல்லலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதனை உயர்த்தி ரூ.2 லட்சம் வரை எடுத்து செல்லலாம் என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்தை சந்தித்து முறையிட்டிருக்கிறோம். இதற்கு வரும் 27ம் தேதி வரை கெடு விதித்துள்ளோம். அதற்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை என்றால், முதற்கட்டமாக வரும் 31ம் தேதி சென்னை உட்பட அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தீர்வு கிடைக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* திருவையாறில் போஸ்டரால் பரபரப்பு: இரட்டை இலை எங்கே?…. கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம்…
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், ஒரத்தநாடு என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. தேஜ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிமுக தலைமை, இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலிலும், ஒருமுறை திருவையாறு சட்டமன்ற தொகுதியிலும் சீட் கட்சிகளுக்கே வழங்கியது. தற்போது, தேஜ கூட்டணியில் உள்ள அமமுகவிற்கு திருவையாறு தொகுதியை அதிமுக ஒதுக்கியதாக கூறப்பட்ட நிலையில், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் உள்ள சுவர்களில் இரட்டை இலை சின்னம் எங்கே?…. திருவையாறு தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களில் இரட்டை இலை சின்னம் போட்டியிட முடியாமல் தடுக்கும் துரோகிகளே…. இரட்டை இலை சின்னம் இல்லை என்றால் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம். இப்படிக்கு அதிமுக உண்மை தொண்டர்கள் என ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
