×

புதுச்சேரியில் 442 பேர் வேட்பு மனு தாக்கல்: 30 தொகுதிகளில் 6 அணி போட்டி

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9ம்தேதி நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் கடந்த 16ம்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. மொத்தம் 442 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று (24ம் தேதி) வேட்புமனு பரிசீலனை நடந்தது. நாளை (26ம்தேதி) மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. புதுச்சேரியில் பல்வேறு கட்சிகள், சுயேச்சைகள் போட்டியிட்டாலும் ஆளும் தேஜ மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையேதான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜ 10 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் லாட்டரி அதிபர் மகன் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சி தலா 2 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்து, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு, பிரசாரத்தை தொடங்கி விட்டனர். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 16, திமுக 13, விசிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ், விசிக வேட்பாளர்கள் இன்னும் அதிகாப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால், ஏற்கனவே முடிவு செய்தபடி வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர். இன்று வேட்பாளர்கள் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. விசிகவுக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுவையில் மூன்று தொகுதியில் விசிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதேபோல், நடிகர் விஜய்யின் தவெக 28 தொகுதிகளிலும், தவெக கூட்டணியில் நேரு எம்எல்ஏவின் நேயம் மக்கள் கழகம் உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளில் களம் காண்கிறது. தேஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி பாமக தனித்து போட்டியிடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களில் தனித்து போட்டியிடுகிறது. முத்தியால்பேட்டை சரவணன், பாகூர் இளவரசி, திருபுவனை தட்சிணாமூர்த்தி, லாஸ்பேட்டை ராஜாங்கம் ஆகியோர் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதேபோல் சசிகலா-ராமதாஸ் கூட்டணியில், சசிகலாவின் அஇபுதமமுக சார்பில் உழவர்கரை தொகுதிக்கு லாவண்யா, நெட்டப்பாக்கம் (தனி) தொகுதிக்கு சிலம்பரசன், வில்லியனூர் தொகுதிக்கு நந்தகோபால், இந்திராநகர் தொகுதிக்கு ஜெயபால் (எ) செங்கேணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். ராமதாஸ் பாமக சார்பில் மாநில அமைப்பாளர் கணபதி, ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற பெயரில் மணவெளி தொகுதியில் போட்டியிடுகிறார்.

* ஆத்தூரா… ஆத்தாடி… அலறும் அதிமுக கூட்டணி
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக ஆத்தூர் தொகுதி உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலின் படி ஆண் வாக்காளர்கள் 1,25,056 பேரும், பெண் வாக்காளர்கள் 1,34,773 பேரும், மூன்றாம் பாலினம் 17 பேரும் என மொத்தம் 2,59,846 வாக்காளர்கள் உள்ளனர். ஆத்தூர் தொகுதியில் 1957 முதல் 15 சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் திமுக 9 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமி 6 முறை வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் ஐ.பெரியசாமியும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக சார்பில் திலகபாமாவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஐ.பெரியசாமி 1,65,809 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திலகபாமா 30,238 வாக்குகள் பெற்றார். ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி பலம் பொருந்திய வேட்பாளர் என்பதால், இங்கு போட்டியிட அதிமுகவினர் விரும்புவதில்லை. அதேநேரம் அதிமுகவில் முக்கிய பிரமுகர்கள் யாரையாவது பழி வாங்க விரும்பினால் ஜெயலலிதா, அவர்களை இங்கே போட்டியிட செய்வாராம். அந்த வகையில் கடந்த 2006 தேர்தலின்போது திண்டுக்கல் சீனிவாசன் மீது ஜெயலலிதாவுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

இதையடுத்து ஐ.பெரியசாமியை எதிர்த்து ஆத்தூர் தொகுதியில், திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டார். அந்த தேர்தலில் ஐ.பெரியசாமி வெற்றி பெற்றார். அதேபோல நத்தம் விஸ்வநாதன் மீதான கடும் அதிருப்தி காரணமாக, இவரை ஆத்தூர் தொகுதியில் போட்டியிட வைத்தார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் எதிர்பார்த்தது போலவே ஐ.பெரியசாமி அபார வெற்றி பெற்றார். இந்த முறை அதிமுக சார்பில் யாருமே ஆத்தூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த தேர்தல் போலவே, இந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க அதிமுக தரப்பு முடிவு செய்தது. அவர்களோ, ‘வேண்டாம்பா.. வேற தொகுதி கொடுங்க…’ என பின்வாங்கி விட்டனராம்.. இதனால் வேறு வழியின்றி அதிமுக களம் காண உள்ளதாகவும், வேட்பாளராக உள்ளூரைச் சேர்ந்தவர்களை நிறுத்த உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

* 4 அடிமைகளை வச்சுட்டு தமிழகத்திற்குள் வர முயற்சிக்குறாங்க தேர்தல் முடிந்ததும் அதிமுக பியூசை பாஜ பிடுங்கிவிடும்: முடிச்சு விட்ட உதயநிதி ஸ்டாலின்
திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக‌ உள்ளிட்ட 4 கட்சிகளை அடிமைகளாக்கி தமிழகத்திற்குள் நுழைய பாஜவினர் முயற்சி செய்கிறார்கள். இங்கு கருப்பு, சிவப்பு வேட்டி கட்டிய திமுகவின் கடைசி தொண்டன் இருக்கும் வரை அது நடக்காது. தமிழகத்தில் டெல்லி அரசியல் எடுபடாது. அதனால்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தேர்தல் டெல்லி அணிக்கும், தமிழகத்துக்குமான போட்டி என முழக்கமிடுகிறார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்திற்கு செல்வதே தற்போது பரபரப்பு செய்தியாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில், கட்சி தலைமையகம் ராயப்பேட்டையில் இருப்பதையே மறந்துவிட்டு டெல்லிக்கு அடிக்கடி சென்று வந்தார். முன்பு முகத்தை மூடியபடி சென்றவர் தற்போது திறந்த முகத்தோடு சென்று வருகிறார். அதனால் இங்கு அதிமுகவினருக்கும் சேர்த்துதான் நாம் பேச வேண்டியிருக்கிறது. தேர்தல் முடிந்ததும் அதிமுகவின் பியூசை பாஜ பிடுங்கிவிடும். பீகாரில் பாஜவோடு கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் 10 முறை முதல்வராக இருந்தார். அவரையே, அந்த பொறுப்பிலிருந்து விலக வைத்துவிட்டனர். அவருக்கே அந்த நிலை என்றால் பாதம் தாங்கி பழனிசாமி தன் நிலை என்னவென்று நினைத்து பார்க்க வேண்டும். திமுகவுக்கு எதிராக பாஜ, அதிமுக உள்ளிட்ட பி, சி என எத்தனை டீமை கொண்டு வந்தாலும் சட்டமன்ற தேர்தலில் திமுக தான் சாம்பியன். இவ்வாறு பேசினார்.

* ஜஸ்ட் பாஸ் தேவையில்லை டிஸ்டிங்சன் பாஸ் வேண்டும்
மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தேர்தலுக்குப் பின் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்தவுடன் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். எனவே, இந்த தேர்தலில் நாம் ஜஸ்ட் பாஸ் ஆக கூடாது, டிஸ்டிங்சன் பாஸ் ஆக வேண்டும் என்றார்.

Tags : Puducherry ,Puducherry Assembly ,
× RELATED அதிமுக – பாஜக கூட்டணியில்...