வேலூர், மார்ச் 25: வளைகுடா ேபார் காரணமாக வேலூரில் வேன்களில் கொண்டு வரப்படும் நாமக்கல் முட்டைகள் மலிவு விலையில் விற்கப்படுகின்றன. அகில இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு தேசிய பங்களிப்பில் 15.63 சதவீதத்துடன் 2ம் இடத்தை பிடித்துள்ளது. ஆந்திர பிரசேதம் 18.37 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 2024-25ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முட்டை உற்பத்தி சுமார் 2,330 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய 2023-24ம் ஆண்டு உற்பத்தியான 2,233 கோடியை விட அதிகமாகும். நாமக்கல் மண்டலத்தில் மட்டும் சுமார் 1,200 கோழிப்பண்ணைகள் உள்ளன.
இங்கு நாளொன்றுக்கு சுமார் 6 முதல் 7.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து தென்கிழக்காசிய நாடுகளுக்கும், வளைகுடா நாடுகளுக்கும், அமெரிக்காவும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போதைய புவிசார் அரசியல் சூழல் மற்றும் வளைகுடா போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக தமிழகம் உள்ளடக்கிய முட்டை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1ம் தேதி முதல் துறைமுகங்களிலும், கப்பல்களிலும் 3.5 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. நாமக்கல் கோழிப்பண்ணைகளில் மட்டும் 80 லட்சம் முட்டைகள் முடங்கி போயுள்ளன.
இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வரை பண்ணையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி முடங்கியதால் உள்ளூர் சந்தையில் முட்டைகள் தேக்கமடைந்து, கொள்முதல் விலை 110 முதல் 130 காசுகள் வரை சரிந்து ரூ.4.30க்கும் கீழ் விலை இறக்கம் கண்டுள்ளது. இதனால் நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள், முட்டைகள் முழுமையாக கோடையில் தேக்கமடைந்து பெருத்த நஷ்டத்தை சந்திப்பதை தவிர்க்க வேன்கள் மூலம் ஒவ்வொரு ஊரிலும் நேரிடையாக முட்டைகளை அனுப்பி விற்பனை செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர். நேற்று வேலூரில் இதுபோல் நாமக்கல்லில் இருந்து வேனில் கொண்டு வரப்பட்ட முட்டைகள் 30 முட்டைகள் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டன. இதுவே கடைகளில் முட்டை ஒன்று ரூ.4.25 முதல் ரூ.5.10 வரை விற்பனையானது.
